×

ஈரோட்டில் சொத்து வரி பாக்கி வைத்திருந்த வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

ஈரோடு : ஈரோட்டில் சொத்து வரி ரூ.2.70 லட்சம் நிலுவை வைத்திருந்த வீட்டின் குடிநீர் இணைப்பினை துண்டித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வீடு, வணிக கட்டுமானங்கள், காலி இடங்களுக்கு சொத்து வரி,குடிநீர் கட்டணம் போன்றவற்றை வசூலித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் மாநகராட்சியின் திட்டப்பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், மாநகராட்சிக்கு நீண்ட காலமாக வரி நிலுவை வைத்துள்ளவர்களிடம், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், தீவிர வசூல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்பேரில், மாநகராட்சி வருவாய் பிரிவு அலுவலர்கள், வரி வசூலிப்பாளர்கள் மூலம் வரி பாக்கி வைத்துள்ளவர்களுக்கு வரி நிலுவை தொடர்பாக எச்சரிக்கை மற்றும் ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு மாநகராட்சி 52வது வார்டுக்கு உட்பட்ட கள்ளுக்கடை மேடு ஜீவா நகர் சாலையை சேர்ந்த அருண்பிரசாத் என்பவர் அவரது வீட்டிற்கான சொத்து வரியை 2017-2018ம் ஆண்டு நிதியாண்டில் இருந்து நடப்பு நிதியாண்டு வரை ரூ.2 லட்சத்து 79 ஆயிரத்து 582ஐ நிலுவை வைத்திருந்தார்.

மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும், வரி நிலுவை தொகையை செலுத்தாமல் இருந்து வந்தார். இதையடுத்து, மாநகராட்சி 4ம் மண்டல உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், உதவி வருவாய் அலுவலர் பூமணி, உதவி பொறியாளர்கள் பழனிவேல், திருமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் அருண்பிரசாத் வீட்டின் குடிநீர் இணைப்பினை துண்டித்தும் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், அவரது வீட்டின் முன் ‘இந்த கட்டிடம் சொத்து வரி நிலுவையில் உள்ளது’ என்ற அறிவிப்பும் ஒட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து, வரி தொகையை செலுத்தாவிட்டால் நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

The post ஈரோட்டில் சொத்து வரி பாக்கி வைத்திருந்த வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Corporation ,
× RELATED தோல் கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி எச்சரிக்கை