×

தேரழுந்தூர் தேவாதிராஜன்

தேவர்களுக்குத் தலைவனான இந்திரனிடம் ஒரு சமயம் இரண்டு அருமையான பொருட்கள் இருந்தன. ஒன்று அழகான வைரமுடி. இரண்டாவது ஒரு விமானம். இந்த இரண்டு பொருள்களையும் யாரிடம் ஒப்படைப்பது என்று யோசித்தான். நினைவுக்கு வந்தது யார் தெரியுமா? கருடபகவான்.

கருட பகவானை அழைத்து இந்திரன் சொன்னான்.

‘‘கருடனே, என்னிடம் இருக்கும் வைர முடியையும் விமானத்தையும் உரியவர்களிடம் ஒப்படைத்து உதவ வேண்டும்.” ‘‘அதற்கென்ன என்னிடம் கொடுங்கள். நான் உரியவர்களிடம் சேர்த்து விடுகிறேன்’’ என்றான் கருடன்.

இந்திரன் இரண்டையும் கருடனிடம் கொடுக்க, அதை வாங்கிக் கொண்ட கருடன், உரியவனைத் தேடி உலகத்தைச் சுற்றி வந்தார். முதலில் அவர் சென்ற இடம் திருநாராயணபுரம் என்ற மேலக்கோட்டை. அங்கே செல்லப் பிள்ளைக்கு வைர முடியைச் சமர்ப்பித்தார். செல்லப்பிள்ளையும் அதை அணிந்து கொண்டு கம்பீரமாகக் காட்சி அளித்தார். அடுத்து விமானத்தை எடுத்துக்கொண்டு தென்பகுதிக்குப் பறந்து வந்தார். காவிரிக்கரை தலமான தேரெழுந்தூருக்கு வந்தவுடன், தேவாதிராஜனான எம் பெருமானைத் தரிசிக்க, எம்பெருமான் கருடனிடம் ஜாடை காட்ட, குறிப்புணர்ந்த கருடன், தன்னிடமிருந்த விமானத்தை தேவாதிராஜனுக்குச் சமர்ப்பித்தார். கருடன் சமர்ப்பித்த விமானம் என்பதால் தேரழுந்தூர் விமானத்திற்கு ‘‘கருட விமானம்’’ என்று பெயர். இதனால் கருடனை தனது இடது புறத்தில் இடமளித்தார் பெருமாள்.

திருவுக்கும் திரு ஆகிய செல்வா,
தெய்வத்துக்கு அரசே, செய்ய கண்ணா,
உருவச் செஞ் சுடர் ஆழி வல்லானே,
உலகு உண்ட ஒருவா, திரு மார்பா,
ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை இன்றால்,
உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது,
அருவித் தின்றிட, அஞ்சி நின் அடைந்தேன்,
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே

– என்று திருமங்கையாழ்வார் வாய் நிறைய,இந்த எம்பெருமானை அழைத்து மங்களாசாசனம் செய்கிறார்.

திருக்கோயிலுக்கு முன்னால் அழகான புஷ்கரணி ரம்மியமாக இருக்கும். “தர்ஷன புஷ்கரணி” என்று அதற்குப் பெயர்.கஜேந்திர புஷ்கரணியும் உண்டு. காவிரி நதிக்கு ஏற்பட்ட சாபத்தை எம்பெருமான் துடைத்தழித்து அவள் பெருமையைக் காப்பாற்றியதாக ஒரு வரலாறு உண்டு. மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு என்று திருக்கடையூரில் சிவபெருமான் வரம் அளித்த கதை தெரியும். ஆனால் தனக்கு மோட்சம் வேண்டும் என்று மார்க்கண்டேயன் கேட்டபொழுது சிவபெருமான், ‘‘திருமாலிடம் பிரார்த்தனை செய்து பெற்றுக் கொள்’’ என்று சொல்ல, மார்க்கண்டேயர் இத்தலத்துக்கு வந்து பெருமாளைச் சேவித்தார் என்பது தலபுராணம். இவருடைய திருஉருவமும் தவம் செய்யும் கோலத்தில் இங்கு தரிசிக்கலாம்.
தல புராணத்தில் இத்தலத்திற்கு “கிருஷ்ண ஆரண்ய ஷேத்ரம்” என்று பெயர்.

உபரிசரவசு என்னும் மன்னன் தன்னுடைய தவ வலிமையால் ஆகாயத்தில் தான் நினைத்த இடத்தில் சஞ்சரிக்கக் கூடிய ஒரு தேரைப் பெற்றிருந்தான் அதில் ஏறி அவன் பல்வேறு இடங்களில் சுற்றிக் கொண்டிருந்தான். அவனுடைய பெருமையை உணர்ந்த தேவர்களும் முனிவர்களும் ஒரு விவாதத்தில் தீர்ப்பு வழங்க அவனைக் கேட்டுக்கொண்டனர். அவனோ நடுநிலையான தீர்ப்பு வழங்காமல் ஒருதலைப்பட்சமாகத் தீர்ப்பு வழங்கினான். இதனால் கோபம் அடைந்த ரிஷிகள், உன்னுடைய பறக்கும் தேர் கீழே விழ வேண்டும் என்று சாபமிட்டனர்.

அடுத்த கணம் அவன் தேரோடு ஒரு குளத்தில் விழுந்தான். அவருடைய தேர் விழுந்து மண்ணில் அழுந்தியதால் இவ்வூருக்குத் தேரழுந்தூர் என்கின்ற பெயர்.பின் தவறு உணர்ந்து பிரார்த்தித்த உபரிசரவசு மன்னனுக்கு, தை அமாவாசையில், கருடன் மீது பெருமாள் காட்சி தருகின்றார்.

சங்க இலக்கியத்திலும் இத்திருத்தலம் பற்றிய செய்திகளை காணமுடிகிறது, அழுதை, அழுந்தூர் போன்ற பெயர்கள் இத்தலத்திற்கு உண்டு. முதல் கரிகாலனின் தலைநகராக இவ்வூர் விளங்கியது.
மூலவரின் திருநாமம் தேவாதிராஜன். வடமொழியில் கோஸகன். தமிழில் ஆமருவியப்பன். கருவறையில் வெள்ளிக் கவசத்தோடு கம்பீரமாகக் காட்சி தருகிறார் பெருமாள். இன்றைக்கெல்லாம் சேவித்துக் கொண்டு இருக்கும்படியான அழியா அழகு. மூலவரின் அழகைத் தூக்கி சாப்பிட்டுவிடும் உற்சவமூர்த்தி அழகு. வலதுகரம் அருட்கரமாக விளங்க, இடது கரத்தில்
ஒய்யாரமாகக் கதையைப் பிடித்துக்கொண்டு தேவி பூதேவி நாச்சிமார்களுடன் காட்சி தருகின்றார்.

இத்திருக்கோயிலில் 11 சந்நதிகள் இருக்கின்றன.வலதுபுற பிராகாரத்தில் வழக்கம்போல் தாயார் சந்நதி. செங்கமல நாச்சியார் என்று திருநாமம். வைகாசியில் திருவோணத்தில் பிரம்மோற்சவம் நடக்கிறது. ஆவணி கோகுலாஷ்டமியும், புரட்டாசி நவராத்திரி விழாவும், மார்கழி வைகுண்ட ஏகாதசி உற்சவமும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.பிரகலாதன் தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மரின் உக்கிரமான தோற்றத்தை கண்டு அச்சம் அடைந்தான். அவனுடைய அச்சத்தைத் தீர்ப்பதற்காக இத்தலத்தில் ஆமருவியப்பனாகக் காட்சி தந்தார். எனவே இத் தலத்திலே பிரகலாதன் இடம்பெற்று இருக்கின்றான். நரசிம்மருக்கு இங்கே சந்நதியும் உண்டு.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் இங்கே பிறந்தார் என்று சொல்கிறார்கள். கம்பர் மேடு என்று அழைக்கப்படும் இடம் அவர் வாழ்ந்த இடமாகக் கருதப்பட்டு, அங்கே கம்பர் மணிமண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்னால் வரை, ஆண்டுதோறும் அங்கே கம்பன் விழா நடைபெறும். கோயிலுக்குள் கம்பரும் அவர் மனைவியும் பெருமாளை கைகூப்பி நிற்கும் சிலைகள் உண்டு.

கண்ணன் இங்கே பசு மேய்ப்பனாக ஆமருவியப்பனாக ஏன் காட்சி தர வேண்டும் என்பதற்கு ஒரு கதை உண்டு. கோகுலத்தில் பசு மேய்த்துக் கொண்டிருந்தான் கண்ணன். ஒரு நாள் பசு மந்தைகளை ஓரிடத்தில் இளைப்பாறச் செய்துவிட்டு யமுனை நதிக்கரையில் சற்றே கண்ணயர்ந்தான். அந்நேரம் பிரம்மா பசு மந்தைகளை ஓட்டிக்கொண்டு இந்த தலத்தில் வந்து மறைத்து விட்டாராம்.

கண்ணன் பசுவைக் காணாமல் தவிப்பான் என்றெல்லாம் பிரம்மா கற்பனைக் கோட்டை கட்டிக்கொண்டு என்ன நடக்கிறது என்று பார்த்தாராம். கண்ணன் கண் விழித்தவுடன் பசு மந்தைகளைக் காணவில்லை என்பதை அறிந்து, பிரம்மாதான் இந்த விளையாட்டு விளையாடி இருக்கிறார் என்று தெரிந்து கொண்டான். வேறொரு பசு மந்தையை தனது மாயையால் சிருஷ்டி செய்த கண் ணபிரான், கவலைப்படாமல் மறுபடியும் யமுனைக் கரையில் பசு மேய்ந்து கொண்டிருந்ததை அறிந்த பிரம்மா, தன்னுடைய தவறுக்கு வெட்கப்பட்டு, கண்ணனிடம் பிரார்த்தனை செய்தார்.

“உன் சக்தி அறியாமல் நான் தவறு செய்துவிட்டேன். நான் ஓட்டிச் சென்ற பசு மந்தைகள், தேரழுந்தூர் என்கிற ஊரில் இருக்கின்றன. கண்ணா! நீ அந்தத் தலத்துக்கு எழுந்தருளி, பசு மேய்க்கும் கோபா லனாகக் காட்சி தர வேண்டும்” என்று விண்ணப்பிக்க, பிரம்மாவின் பிரார்த்தனையை ஏற்ற கண்ணன், இத்தலத்தில் ஆமருவிஅப்பனாக, நாம் காணும் சேவையைத் தந்து கொண்டிருக்கின்றான். இன்றைக்கும் உற்சவ பெருமாளுக்கு முன்புறம் கன்றும், பின்புறம் பசுவும் அமைந்துள்ள பேரழகு அதி அற்புதமானதாக இருக்கும். காட்சி கண்டவர்கள் உபரிசரவசு, காவேரி, கருடன், அகத்தியர்.

திருமங்கை ஆழ்வார் இவன் அழகில் மயங்கினார். இவ்வூருக்கு வந்தபோது அவர் கம்பீரமாகப் பெருமாளை விசாரித்தார். அப்பொழுது பெருமாள் தன்னை, ‘‘நான் யார் தெரியுமா. தேவாதிராஜன்’’ என்று சொல்ல, திருமங்கையாழ்வார்” இது இந்திரன் கோவில் போல் இருக்கிறது.‘‘(இந்திரனுக்கு தேவாதிராஜன் என்று பெயர்) என்று எண்ணி, மிடுக்கோடு,’’ அப்படியா! சந்தோஷம். ஆனால் நான் பெருமாளையும் அடியார்களையும் பாடுவேன்.

செருக்குற்ற அரசர்களைப் பாடுவதில்லை” என்று சொல்லி திரும்ப நடக்கத் தொடங்க, இறைவன், “ஆழ்வீர்! நிற்க வேண்டும்! உன் தமிழ் கேட்கத்தானே காத்துக் கொண்டிருக்கிறோம். நான் தேவாதிராஜனாக இருந்தாலும், அடியார்க்கு மெய்யன். எளியன். ஆமருவியப்பன். கண்ணன் என்பதை அறியாமல் போகிறீரே’’ என்று சொல்ல, உடனே திருமங்கையாழ்வார் ஆமருவியப்பனைத் தரிசித்து, பல பாசுரங்களால் பாடினார். ஆழ்வார் நின்ற இடத்திற்கு அருகில் சந்நதித் தெருவில் தனிக்கோயில் உண்டு.

இன்றும் பெருமாள் அமுது செய்தவுடன், அது திருமங்கை ஆழ்வாருக்கு சடாரி பிரசாதத்துடன் அனுப்பப்படுகிறது. திருமங்கை ஆழ்வார் அவதரித்த திருக்கார்த்திகை நாளில், பெருமாள் திருமங்கை ஆழ்வார் சந்நதிக்கு எழுந்தருளி, மண்டகப்படி கண்டருள்கிறார். பெரிய திருமொழியில் மட்டுமல்லாது சிறிய திருமடல் ,திருநெடுந்தாண்டகத்திலும் பாசுரம் பாடினார் திருமங்கை ஆழ்வார்.

திருமங்கை ஆழ்வார் இத்தலத்தைத் தன் பார்வையில் எப்படிப் பதிவு செய்கிறார் என்பதைப் பார்ப்போம். அழகான அகலமான வீதிகள். விண்ணை முட்டும் மணி மாடங்கள். வெண்மையான சுதை அலங்காரம் அந்த மாளிகைகளின் அழகுக்கு அழகு சேர்க்கிறது. உயர்ந்த மாடங்கள் என்பதால், வீதிகளில் நிழல் தான் இருக்கிறது. சூரிய ஒளி எப்பொழுதாவது தான் தெரிகிறது. சூரிய ஒளி தெரியாமல் இருப்பதற்கு அது மட்டும் காரணம் அல்ல. வளமான கரும்பு வயல்கள் அந்த ஊரைச் சுற்றி இருக்கின்றன.

கரும்பை ஆங்காங்கே பிழிந்து காய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள். கரும்பு ஆலைகள்அக்காலத்திலேயே இப்பகுதியில் அதிகம் உண்டு என்பதை திருமங்கையாழ்வார் பாசுரம் நமக்குக் காட்டுகிறது. ஆலையின் கரும்புகை அதிகமாக வானத்தில் பரவுவதால் இருண்டு காட்சி தருகிறதாம். இப்படிப்பட்ட ஊரிலுள்ள தேவாதிராஜன், அடியேன் மனத்தில் வந்து புகுந்து கொண்டான். என்னுடைய மனத்தை தேடி வந்து புகுந்து கொண்ட அவருடைய அருமையும் பெருமையும் எளிமையும் என எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கிறேன். என்னுடைய உள்ளம் அவனுடைய அன்பை எண்ணித் தவிக்கிறது. அவன் அருளை எண்ணித் துடிக்கிறது. என் கண்கள் கண்ணீரால் பனிக்கிறது.

மாலைப் புகுந்து மலர் – அணைமேல் வைகி
அடியேன் மனம் புகுந்து என்
நீலக் கண்கள் பனி மல்க
நின்றார் நின்ற ஊர்போலும்-
வேலைக் கடல்போல் நெடு வீதி
விண் தோய் சுதை வெண் மணி மாடத்து
ஆலைப் புகையால் அழல் கதிரை
மறைக்கும் வீதி அழுந்தூரே
என்ன அழகான பாசுரம்!

திருவுக்கும் திருவாகிய ஸ்ரீமன் நாராயணன், உகந்து அருளிய திவ்யதேசங்களில் ரங்கத்தில்  ரங்கநாத பெருமாளாகவும், திருப்பதியில் கோவிந்தராஜனாகவும், காஞ்சிபுரத்தில்  தேவாதிராஜனாகவும் சேவை சாதிக்கின்றார்,  வைஷ்ணவர்களுக்கு இம்மூன்று தலங்களும் முக்கிய தலங்கள். ஆனால் இவை வெவ்வேறு இடங்களில் இருக்கின்றன. இம்மூன்று தலத்து பெருமாள்களும் ஒரே தலத்தில் காட்சி தர வேண்டும் என்று உபரிசரவசு மன்னன் பிரார்த்தனை செய்தான். அவன் பிரார்த்தனைக்கு இணங்கி மூன்று பெருமாள்களும் மூன்று கோயில்களில் தனித்தனியாக இதே தலத்தில் காட்சி தருகின்றார்கள்.

இந்த சேவையம் உபரி சிரவசு மன்னனுக்குத் தை அமாவாசையன்று கிடைத்ததாக, திருத்தல வரலாறு செப்புகிறது. அன்று முதல் இன்று வரை,சேவை சாதித்து அருளும் எம்பெருமான்களை திருமங்கையாழ்வார் பல பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். இத்திருத்தலத்தில் பெருமாளின் ‘‘ரஷகத்துவம்’’ அதாவது ‘‘காக்கும் தன்மை’’ வெளிப்படுகிறது என்பதைப் பல பாசுரங்களில் காட்டித் தருகின்றார்.

நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொலிந்த தமிழ்-மாலை சொல்ல பாவம் நில்லாவே
குன்றால் மாரி தடுத்தவனை குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ட அணி அழுந்தூர்
நின்றானை-அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே
– என்ற அடுக்கடுக்கான பாசுரங்கள் அவனுடைய காக்கும் தன்மையைச் சொல்லும்.

வங்கிபுரத்து ஸ்ரீ ரங்காச்சாரியார் சுவாமி இத்தலத்து எம்பிரான் மீது, ‘‘கோஸக ஸ்தவம்,” ‘‘கோஸக அஷ்டோத்திர சத நாமாவளி” போன்ற நூல்களை இயற்றி இருக்கிறார். திருவரங்கத்தை போலவே இங்கேயும் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் அற்புதமாகக் காட்சி தருகின்றார். இவருக்குத் தனிக்கோயில் உண்டு. கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். தேவி மடியில் திருமுடியும், பூமி பிராட்டி மடியில் திருவடியையும் வைத்துக்கொண்டு ஆனந்தமாக, ஆதிசேஷ சயனத்தில் பள்ளி கொண்டு சேவை சாதிக்கின்றார்.

இந்தக் கோலத்திற்கு ‘‘போக சயனம்’’ என்று பெயர். சித்ரகூடத்தில் ஸ்ரீ ராமபிரான் சீதையின் மடியில் தலை வைத்துப்படுத்திருந்த கோலத்தையும், ரங்கமன்னார் ஆண்டாளின் திருவடியில் தலை வைத்து சயனித்திருக்கும் கோலத்தையும் இக்காட்சி நினைவூட்டும். வைணவர்களுக்கு துவைதம் எனப்படும் மந்திரம் முக்கியமானது, இதன் துவக்க வாக்கியத்தை பூமிப் பிராட்டியும் உத்தர வாக்கியத்தை ஸ்ரீ தேவியும் நினைக்கின்றார்கள்.

ஸ்ரீ கோவிந்தராஜனுக்கும் தனிக்கோயில் உண்டு. திருமலையில் தேவியர் இல்லாமல் காட்சி தரும் பெருமாள், அந்தக் குறை தீர, இங்கே திருமகளும் மண்மகளும் உடன் இருக்க காட்சி தருகின்றான். தேவாதிராஜனைச் சேவிக்க திருவழுந்தூர் செல்பவர்கள், அதே வீதியில் உள்ள இந்த இரண்டு எம்பெருமான்களையும் சேவிப்பது பெரிய பாக்கியம். தேரழுந்தூரில் ஸ்ரீ செங்கமலவல்லி நாச்சியார் சமேத ஆமருவியப்பனின் அடி நிலைகளில் சரணடைந்து உய்வு பெறுவோம்.

முனைவர் ஸ்ரீ ராம்

The post தேரழுந்தூர் தேவாதிராஜன் appeared first on Dinakaran.

Tags : Therajunthur Devathirajan ,Indra ,Lord ,Garuda ,Theragunthur Devathirajan ,
× RELATED வளமான வாழ்வருளும் வராஹர்