×

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் ஓசூரில் 2வது நாளாக கலெக்டர் ஆய்வு

ஓசூர் : உங்களைத்தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ், ஓசூர் மாநகராட்சியில் மாவட்ட கலெக்டர் சரயு 2வது நாளாக கள ஆய்வு மேற்கொண்டார்.”உங்களைத் தேடி உங்கள் ஊரில்\” திட்டத்தின் கீழ், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பஸ் நிலையத்தில், குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடவும், பயணிகள் கழிவறைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், தெருவோர கடைவியாபரிகள் பொருட்கள் விற்பதற்கான உரிமத்தை தங்களது கடைகளின் முன்பகுதியில் ஒட்டி வைக்க அறிவுறுத்தினர்.

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகவரி உழவர் சந்தையில் காய்கறி வியாபரிகள் தங்களது உரிமம் மற்றும் டோக்கன் பெற்று வியாபரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஆவின் பாலகத்தில் நெய், பால்கோவா, பால், ஐஸ்கீரீம் ஆகியவற்றின் இருப்புநிலை குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 27வது வார்டு, சீதாராம் நகர், நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசி போடும் பிரிவு, தடுப்பூசி சேமிப்பு அறை, மருத்துவர் அறை, ஆய்வகம், பிரசவ அறை, உள்நோயாளிகள் பிரிவு, கர்பப்பைவாய் பரிசோதனை அறை, மார்பக பரிசோதனை அறை, அவசர சிகிச்சை பிரிவு, முன் அவசர சிகிச்சை பிரிவு அறை, கட்டுபோடும் அறை ஆகியவை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சூளகிரி ஊராட்சி ஒன்றியம், மோரனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகளை ஆய்வு செய்தனர். முன்னதாக, மாவட்ட கலெக்டர் ஓசூர் மாநகராட்சி 7வது வார்டில், ஆவலப்பள்ளி பஸ்திரோடு, முனிதேவி நகர் ஆகிய பகுதிகளில் தெரு விளக்கு, தூய்மை பணியாளர்கள் சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணிகளையும், 12வது வார்டில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதையும், 11வது வார்டு, ராஜாஜி நகர் முதல் குறுக்கு தெருவில், தூய்மை பணியாளர்கள் சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மகாதேவன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் இளங்கோ, மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜாராமன், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், ஓசூர் தாசில்தார் விஜயகுமார், சூளகிரி பிடிஓ முருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், ஜீமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் ஓசூரில் 2வது நாளாக கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Hosur ,District ,Sarayu ,Hosur Corporation ,Dinakaran ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...