×

ஆரணியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்

*பள்ளி மாணவர்களுடன் உணவு சாப்பிட்டார்

ஆரணி : ஆரணியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் 2ம் நாளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகாவில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் தொடங்கி இரவு 10 மணிவரை துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். முன்னதாக நேற்று முன்தினம் இரவு மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.

அதனை தொடர்ந்து, ஆரணி அரசு மருத்துவமனைக்கு சென்று அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள், புறநோயளிகள் பிரிவுகள், நோயாளிகளின் எண்ணிக்கை பராமரிப்பு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். ஆரணி புதிய பஸ்நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்து, அங்குள்ள பயணிகள், பொதுமக்களிடம் இரவு நேரங்களில் வெளியூர், கிராமங்களுக்கு செல்ல பஸ் வசதிகள் உள்ளதா? பஸ் நிலையத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது பொதுமக்கள், ‘கிராமப்புறங்களில் இருந்து வரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், சென்னை, கோவை, புதுச்சேரிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். பஸ்நிலையத்தில் பழுதடைந்த மின் விளக்குகள், கழிவறைகள் தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து பஸ்நிலையத்தில் உள்ள கழிவறைகள், பஸ்நிலையத்தை ஆய்வு செய்தார். பின்னர், விருந்தினர் மாளிகையில் இரவு தங்கி ‘உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்’ கீழ் 2வது நாளாக நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு பணிகளை தொடங்கினார்.

அப்போது, காலை 7 மணி அளவில் ஆரணி டவுன் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு சென்று, விவசாயிகள் விற்பனை செய்யும் காய்கறி, பழங்களை பார்வையிட்டார்.
தொடர்ந்து, சந்தையில் அடிப்படை வசதிகள், கழிவறை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்தார். பின்னர், விவசாயிகள், வியாபாரிகளிடம் பழங்கள், காய்கறி பொருட்களின் தரம், விலைகள், குறைகள், பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது உழவர் சந்தையில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தி, அவர்களுக்கு மஞ்சப்பை வழங்கிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இதனை தொடர்ந்து, ஆரணி நகராட்சியில் உள்ள 4வது வார்டு, காமராஜர் சிலை அருகில் நகராட்சி பணியாளர்களுடன் இணைந்து ஒட்டுமொத்த தூய்மை பணிகளை கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் மேற்கொண்டார். தொடர்ந்து, தச்சூர் ஊராட்சிக்குட்பட்ட மேட்டூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து, அங்கு மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.

பின்னர், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அனைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். மேலும், பொதுமக்களிடம் குறைகளை கேட்டு கோரிக்கை மனுக்களை பெற்றார். இதனை தொடர்ந்து, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் புங்கம்பாடி ஊராட்சிக்குட்பட்ட அணியாலை கிராமத்தில் உள்ள தாங்கல் ஏரியில் சீமை கருவேல முள் மரங்களை அகற்றும் பணிளை பார்வையிட்டார்.

இதேபோல், மாவட்ட வேளாண் இயக்குனர் அரக்குமார், ஆரணி அடுத்த வெள்ளேரி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த மணிலா விதைப்பண்ணையை ஆய்வு செய்தார்.
அப்போது, ஆர்டிஓ பாலசுப்ரமணியன், தாசில்தார் மஞ்சுளா, வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன், வேளாண்மை துறை இணை இயக்குனர் அரக்குமார், கலெக்டர் நேர்முக உதவியாளர் உமாபதி, நகராட்சி ஆணையாளர் குமரன், வேளாண் உதவி இயக்குனர் புஷ்பா உட்பட அனைத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post ஆரணியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர் appeared first on Dinakaran.

Tags : Arani ,Bhaskara Pandian ,Thiruvannamalai district ,Arani taluka ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க பட்டு கைத்தறி...