×

போலீசாரின் எச்சரிக்கையை மீறி பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்

கடலூர் : கடலூரில் ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளன. இங்கு கடலூர் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளும் இங்கு வந்து கல்வி பயின்று செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பேருந்து பயணத்தையே நம்பி உள்ளனர். இதற்காக போக்குவரத்து கழகம் சார்பில் பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் ஒரு சில மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் தொங்கியபடியே ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூர் செம்மண்டலம் பேருந்து நிறுத்தத்தில் போக்குவரத்து போலீசார் அந்த வழியாக வந்த பேருந்துகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்த பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் பேருந்துகளின் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை பேருந்துகளில் இருந்து இறக்கி அறிவுரை வழங்கினர்.

பேருந்துகளின் படிக்கட்டில் தொங்கியபடி செல்லக்கூடாது, இதனால் விபத்து ஏதும் ஏற்பட்டால் வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே இதுபோன்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர். போலீசார் எவ்வளவு தான் அறிவுரை வழங்கியபோதும் நேற்று காலை கடலூர் தேவனாம்பட்டினத்துக்கு சென்ற பஸ்களில் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடியே சென்றதை காண முடிந்தது. போலீசார் தங்களுடைய கடமையை செய்தபோதும், மாணவர்கள் இதுபோன்ற பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே மாணவர்களும் இதுபோன்ற பயணத்தை மேற்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

The post போலீசாரின் எச்சரிக்கையை மீறி பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Dinakaran ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!