×

ஆற்காடு அருகே உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்ட பள்ளி மாணவன் உடலுக்கு அரசு மரியாதை

*கலெக்டர் அஞ்சலி செலுத்தினார்

ஆற்காடு : ஆற்காடு அருகே உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்ட பள்ளி மாணவன் உடலுக்கு கலெக்டர் வளர்மதி நேரில் அஞ்சலி செலுத்தினார். உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. மூளைச்சாவு நிலையை அடைந்த துயர சூழ்நிலையிலும், உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால் தான் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது.

உடல் உறுப்புகளை தானமாக வழங்கி பல உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையில், அவர்களது உடலுக்கு இறுதிச்சடங்குகள் அரசு மரியாதைகளுடன் மேற்கொள்ளப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா, வரகூர் அடுத்த மேட்டுக்குடிசை கிராமத்தை சேர்ந்த பாரத்(17) கம்மவான்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

கடந்த 18ம் தேதி இரவு வேலூர் அடுக்கம்பாறை அருகே உறவினரின் திருமணத்திற்கு பைக்கில் சென்று விட்டு வரும்போது சாலை விபத்தில் படுகாயமடைந்து பூட்டுத்தாக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் பாரத் மூளைச்சாவு அடைந்தார். தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகள் தானம் செய்திட பெற்றோர் முழு சம்மதம் தெரிவித்தனர்.

அதன்பேரில், பாரத்தின் உடலில் இருந்து கல்லீரல் மற்றும் இடது சிறுநீரகம், வலது சிறுநீரகம் வேலூர் சிஎம்சி மற்றும் ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது. இந்நிலையில், அரசின் ஆணையின்படி மரியாதை செலுத்தும் வகையில் கலெக்டர் ச.வளர்மதி நேற்று, மேட்டுக்குடிசையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாணவன் பாரத் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, திமிரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஜே.ரமேஷ், ஆற்காடு தாசில்தார் அருள்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post ஆற்காடு அருகே உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்ட பள்ளி மாணவன் உடலுக்கு அரசு மரியாதை appeared first on Dinakaran.

Tags : Arcot ,Artgad ,Collector ,Varamati ,Tamil Nadu ,
× RELATED ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில்...