×

சாமுண்டீஸ்வரி அம்மன் கரக திருவிழாவையொட்டி காளை விடும் திருவிழாவில் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த 160 காளைகள்

*மாடு முட்டியதில் 15 பேர் காயம்

ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கரக திருவிழாவை முன்னிட்டு நேற்று நடந்த காளை விடும் திருவிழாவில் 160 காளைகள் இளைஞர்கள் மத்தியில் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து ஓடியது. இதில், மாடுகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர்.வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த ஆண்டிகொட்டாய் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கரக திருவிழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் காளை விடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டும் சாமுண்டீஸ்வரி அம்மன் கரக திருவிழாவை முன்னிட்டு ஆண்டிகொட்டாய் கிராமத்தில் நேற்று காளை விடும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காளைகள் ஓடும் ஓடுதளம் சீரமைத்து இருந்தனர். காலை 9 மணியளவில் தொடங்கிய இந்த மாடு விழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 160க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று இருந்தன.

விழாவை காண ஒடுகத்தூர், அணைக்கட்டு, குருவராஜபாளையம், அகரம், குடியாத்தம், திருப்பத்தூர், ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனர். தொடர்ந்து, தாசில்தார் வேண்டா முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன், ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பின்னர், வாடி வாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக காளைகளை கட்டவிழ்த்து விடப்பட்டதும் அவை இளைஞர்கள் மத்தியில் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து புழுதி பறக்க ஓடியது. அப்போது, வீதியில் இருந்த இளைஞர்கள் காளைகளை தட்டியும், விசிலடித்தும் ஆரவாரம் செய்தனர். இதனால், காளை விடும் திருவிழா களை கட்டியது.

மேலும், காளைகள் முட்டியதில் ஓடுதளத்தில் நின்றிருந்த 15க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது. அவர்களுக்கு, அங்கு முகாமிட்டிருந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

அதேபோல், வாடி வாசலில் இருந்து குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசு ரூ.70 ஆயிரம், 2வது பரிசு ரூ.66 ஆயிரம், 3வது பரிசு ரூ.45 ஆயிரம் என மொத்தம் 63 பரிசுகள் நிர்ணயிக்கப்பட்டு காளையின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. காலை தொடங்கிய மாடு விடும் விழா மதியம் 2 மணி வரை தொடந்து நடைபெற்றது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கவும், பொதுமக்களுக்கும் வேப்பங்குப்பம் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

The post சாமுண்டீஸ்வரி அம்மன் கரக திருவிழாவையொட்டி காளை விடும் திருவிழாவில் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த 160 காளைகள் appeared first on Dinakaran.

Tags : letting ,Chamundeshwari Amman Karaka festival ,Odugathur ,Samundeswari Amman Karaka festival ,-letting ,Samundeeswari Amman Karaka festival ,
× RELATED குடும்ப பிரச்னையால் பெண்...