×

‘24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கணும்’ அதிமுக மாஜி நிர்வாகிக்கு நடிகை திரிஷா நோட்டீஸ்

சென்னை: அதிமுகவில் 2017ம் ஆண்டு உட்கட்சி பூசல் ஏற்பட்ட நிலையில், சசிகலா தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது அங்கு பல சம்பவங்கள் நடைபெற்றதாக அதிமுகவின் முன்னாள் சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.வி.ராஜு தற்போது குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நடிகை திரிஷா மற்றும் கருணாஸ் குறித்தும் அவதூறாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில், திரைத்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்த திரிஷா, “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் இறங்கி தரம் தாழ்ந்து பேசும் இதுபோன்ற மனிதர்களை தொடர்ச்சியாக பார்ப்பதற்கு அருவருப்பாக உள்ளது. இந்த அவதூறுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனி இவ்விவகாரம் தொடர்பாக எனது சட்ட ஆலோசகரே பேசுவார்” என குறிப்பிட்டிருந்தார். தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏவி.ராஜு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி திரிஷா அவருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், தன்னைப் பற்றிய கீழ்த்தரமான பேச்சுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். பத்திரிகைகள், தொலைக்காட்சி சேனல்கள், யூடியூப் சேனல்களில் இந்த மன்னிப்பை வீடியோ மூலம் கேட்டு வெளியிட வேண்டும். தனக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காக நஷ்ட ஈடும் வழங்க வேண்டும். அவதூறு வீடியோவை அனைத்து தளங்களிலிருந்தும் நீக்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ‘24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கணும்’ அதிமுக மாஜி நிர்வாகிக்கு நடிகை திரிஷா நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Trisha ,AIADMK ,CHENNAI ,Sasikala ,Couvatur ,Salem West Union ,AV Raju ,Dinakaran ,
× RELATED 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியான...