×

ரூ.540 கோடி நிவாரணம் வழங்கியிருக்கிறோம் புயல், பெருமழை இயற்கை பேரிடர்களுக்கு ‘அம்மஞ்சல்லி’ கூட வழங்காத ஒன்றிய அரசு: தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் பாரபட்சம்? பதிலுரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல், பெருமழை இயற்கை பேரிடர்களுக்கு ‘அம்மஞ்சல்லி’ கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை என்று பட்ஜெட் விவாதத்துக்கான பதிலுரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார். சட்டப் பேரவையில் நேற்று 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: ஒன்றிய அரசின் திட்டங்களின் பேரில் தான் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது என்று ஒரு திட்டமிட்ட பிரசாரத்தை செய்து வருகின்றனர். பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் (கிராமம்) ஒரு அலகின் விலை ரூ.1.2 லட்சம். இதில், ரூ.72 ஆயிரம் ஒன்றிய அரசின் பங்கு, ரூ.48 ஆயிரம் மாநில அரசின் பங்கு.

கிராமங்களில் இந்த வீடுகள் கட்ட இத்தொகை போதவில்லை என்று தமிழ்நாடு அரசு கூடுதலாக ரூ.1.2 லட்சம் வீடொன்றிற்கு வழங்கி வருகிறது. ஆக மொத்தம், ஒரு வீட்டிற்கு வழங்கப்படும் ரூ.2.4 லட்சத்தில், ஒன்றிய அரசின் பங்கு வெறும் ரூ.72 ஆயிரம் மட்டும் தான், ஆனால் மாநில அரசின் பங்கு ரூ.1 லட்சத்து 68 ஆயிரம். 30 சதவீதம் மட்டுமே கொடுத்துவிட்டு, திட்டத்திற்குப் பெயர் ’பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா‘ என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
’கலைஞரின் கனவு இல்லம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, வீடு ஒன்றிற்கு ரூ.3.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசு நிதியில் இருந்தே செயல்படுத்தப்படும். அரசு ஏற்கனவே கட்டித்தந்த 2.5 லட்சம் பழைய வீடுகளைப் பராமரிப்பதற்காக ரூ.2 ஆயிரம் கோடியை அறிவித்துள்ளது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்திற்கு (நகர்ப்புறம்) ஒன்றிய அரசின் பங்கு வெறும் ரூ.1.5 லட்சம். ஆனால், மாநில அரசின் பங்கோ ரூ.7 லட்சம்.

முதல்வரின் கிராமசாலை திட்டம், பிரதமரின் கிராம சாலை திட்டத்தை பெயர் மாற்றி அறிவித்துள்ளதாக தவறாக கூறினார்கள். இத்திட்டம் முழுவதையும் மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து தான் செயல்படுத்தி வருகிறது. ஆனால், மறுபுறம், பிரதமரின் கிராம சாலை திட்டத்திற்கு, ரூ.1,945 கோடி மதிப்பீட்டில் ஒன்றிய அரசிற்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. இன்றுவரை எந்தவிதமான ஒப்புதலும் தரவில்லை.மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை சீரமைப்பதற்காக ஒன்றிய அரசிடம் ரூ.19,689 கோடி மாநில அரசுக்கு நிவாரண நிதியாக வழங்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேலும், தென் மாவட்ட வெள்ளத்தினால் பெரும் பாதிப்பினை தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் எதிர் கொண்டது. இதனால், ரூ.18,214 கோடியாக ஒன்றிய அரசிடம் நிதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. ஆண்டுதோறும் விடுவிக்கப்படும் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் 2வது தவணையை வழங்கிவிட்டு, ஏதோ பெரிய அளவில் தமிழகத்துக்கு நிதி உதவியை வழங்கியது போன்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மேலும், பல்வேறு குழுவினர் வந்தபோதிலும், எந்த ஒரு நிதியையும் இன்றுவரை ஒன்றிய அரசு வழங்கவில்லை.

கிராமத்தில் பேச்சு மொழியாக சொல்வார்கள், ஒரு அம்மஞ்சல்லி கூட தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடருக்கு வழங்காத அரசாக ஒன்றிய அரசு உள்ளது. தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் இந்த பாரபட்சமா என்ற கேள்வியை நான் பேரவையில் வைக்க விரும்புகிறேன். ஆனால் தமிழக அரசு மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.6000 வழங்கியது. மேலும் தென்மாவட்டத்தில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் என மொத்தம் ரூ.540 கோடி நிவாரணம் வழங்கியுள்ளோம்.

அரசியல் ரீதியாகச் செயல்படும் ஒன்றிய அரசினால் பாதிக்கப்படுவது ஏழை, எளிய மக்கள் தான். மக்களை வாக்குகளாகப் பார்க்கும் பாஜவுக்கு மக்களின் துயரத்தை எவ்வாறு அறிய இயலும். ஒன்றிய அரசு எந்த ஒரு நிதியையும் வழங்காத நிலையில் இந்த அரசு தனது சொந்த நிதியில் இருந்து பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இந்த மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடிக்கு வருகை தர உள்ளார். அதற்கு முன்பாகவாவது, தேசியப் பேரிடர் நிவாரண நிதியை வழங்குவார் என்று நம்புகிறோம். விண்வெளிச் சாதனைக்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர், சமவெளியில் நடந்த துயரத்திற்கு நிவாரணம் அளிப்பாரா? என்று எதிர்நோக்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

* மெட்ரோ ரயில் 2ம் கட்டம் எடப்பாடி குரல் கொடுப்பாரா?
சென்னை மெட்ரோ ரெயிலின் 2ம் கட்டத்திற்கு தனது பங்களிப்பாக 50 சதவீதம் ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று நம்பிக்கையில் தான், இத்திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சென்னைக்கு வந்து, எதிர்க்கட்சித் தலைவருடன் கைகுலுக்கி, திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதற்குப் பின், 2021 ஆகஸ்ட் 17ம் தேதி திட்ட முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்தது. ஆனால், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டத்திற்கு ஒன்றிய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், இத்திட்டத்தின் மொத்தச் செலவையும் மாநில அரசே ஏற்க வேண்டியுள்ளது. நமக்கு ஒப்புதல் அளிக்காத அதேவேளையில், ஒன்றிய அரசு, 2022ம் ஆண்டு நாக்பூர் மெட்ரோ ரயில் 2ம் கட்டம், கொச்சி மெட்ரோ ரயில் 2ம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

2023ம் ஆண்டு குருகிராம், புனே மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நியாயமற்ற செயலினால், மாநில அரசுக்கு இந்த ஆண்டு ரூ.9 ஆயிரம் கோடியும், அடுத்த ஆண்டு ரூ.12 ஆயிரம் கோடியும் கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு விரைவில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் என்று நம்புகிறோம். அதற்கு, சமீபத்தில் மனம் மாறிய நமது எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குரல் கொடுப்பார் என்றும், நமது கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனும் உதவுவார் என்றும் நம்புகிறேன்.

The post ரூ.540 கோடி நிவாரணம் வழங்கியிருக்கிறோம் புயல், பெருமழை இயற்கை பேரிடர்களுக்கு ‘அம்மஞ்சல்லி’ கூட வழங்காத ஒன்றிய அரசு: தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் பாரபட்சம்? பதிலுரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union government ,Tamil Nadu ,Minister ,Thangam ,South Government ,Thangam Thannarasu ,Ammanjalli ,Assembly ,Southern government ,
× RELATED யானை பசிக்கு சோளப் பொறி போல்...