×

ஒரு போக நிலங்களின் முறைப்பாசனத்திற்காக வைகை அணையில் 2000 கனஅடி நீர் திறப்பு

ஆண்டிபட்டி: ஒரு போக நிலங்களின் முறைப்பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நேற்று காலை முதல் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே, 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இதன் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இருப்பினும் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால், கடந்த சில மாதங்களாகவே அணையின் நீர்மட்டம் 69 அடிக்கு மேல் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அணையில் இருந்து 120 நாட்களுக்கு மதுரை மாவட்ட ஒருபோக பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஒருபோக பாசன நிலங்களுக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர், கடந்த சில நாட்களுக்கு முன்பு முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டு அணையில் நீர் இருப்பை பொறுத்து திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால், கடந்த 16ம் தேதி முறைப்பாசனத்தின் படி ஒருபோக பாசன நிலங்களுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 5 நாட்களாக நிறுத்தப்பட்ட தண்ணீர் நேற்று காலை முதல் முறைபாசனப்படி மீண்டும் பாசனத்திற்கு 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், அணையில் இருந்து குடிநீருக்காக 69 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து மொத்தம் 2069 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 69.69 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 1402 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

The post ஒரு போக நிலங்களின் முறைப்பாசனத்திற்காக வைகை அணையில் 2000 கனஅடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Vaigai Dam ,Andipatti ,Theni ,Dindigul ,Dinakaran ,
× RELATED வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு