×

சுகமான தூக்கத்திற்கு நாங்க கியாரன்டி!

நன்றி குங்குமம் தோழி

இலவம் பஞ்சு மெத்தை தயாரிப்பாளர் மோகனா

வேலைக்குச் சென்று அசதியுடன் வீட்டிற்கு நுழைந்ததும் நாம் முதலில் ஒன்று சோபாவில் அமர்வோம்… அடுத்து மெத்தையில் அப்படியே தலை சாய்ப்போம். அந்த சில விநாடிகள் மெத்தையில் படுத்து எழுந்தால் அன்றைய அசதி முழுதும் நீங்கியது போன்ற உணர்வு ஏற்படும். அதன் பிறகு அடுத்த வேலை செய்ய நாம் ஆயத்தமாகிவிடுவோம். இரவு நிம்மதியாக தூங்கவும் மெத்தைகள் மிகவும் முக்கியம்.

என்ன தரமான மெத்தையாக இருந்தாலும், இரவு தூங்கி எழுந்த பிறகு உடல் வலி மற்றும் அசதியாக இருந்தால் தூக்கத்திற்கான அர்த்தமே இருக்காது. அதனால்தான் நம்மில் பலர் விலை அதிகமாக இருந்தாலும், நம் உடல் தினமும் ஓய்வினை நாடும் மெத்தையை பார்த்து பார்த்து வாங்குகிறோம். ‘‘ஃபோம் மெத்தைகள், ஸ்பிரிங் மெத்தைகள் என பலவித ரகங்கள் இருந்தாலும் நம் உடலுக்கும் மனசுக்கும் என்றும் நிம்மதியை தருவது இலவம் பஞ்சு மெத்தை’’ என்கிறார் பவானியைச் சேர்ந்த மோகனா. இவர் தன் கணவருடன் இணைந்து ‘ஸ்ரீ ஸ்ரீநிவாசா பெட்ஸ்’ என்ற பெயரில் இலவம் பஞ்சு மெத்தைகள், தலையணை மற்றும் குஷன்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

‘‘இந்தத் தொழிலை முதன் முதலில் என் கணவரின் தாத்தாதான் ஆரம்பித்தார். அவருக்கு பிறகு என் மாமனார், அவரைத் தொடர்ந்து என் கணவரும் நானும் சேர்ந்து பார்த்துக் கொள்கிறோம். அவங்க பல வருஷமா மெத்தை மற்றும் பஞ்சு தொழிலில் ஈடுபட்டு இருக்காங்க. எனக்கு அவர்கள் செய்யும் வேலையை பார்த்தவுடன் அதன் மேல் தனிப்பட்ட ஆர்வம் ஏற்பட, இந்தத் தொழிலில் முழுமையாக நான் ஈடுபட ஆரம்பிச்சேன். பொதுவாக மெத்தைகள் என்றால் இலவம் பஞ்சுதான் இருக்கும்.

ஆனால் இப்போது ஃபோம் மெத்தைகள் முழுமையாக ஆட்கொண்டுவிட்டதால் பலருக்கு இந்த மெத்தைப் பற்றி தெரிவதில்லை. மேலும் அதை பயன்படுத்துவதும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இலவம் பஞ்சு மெத்தையில் படுத்து தூங்கும் போது அது நம்முடைய உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கிறது. உடல் வலி ஏற்படாது, குறிப்பாக முதுகு வலி மற்றும் கழுத்து வலி. உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இவை இரண்டுமே சரியாக இருந்தால் அந்த மெத்தையில் படுக்கும் போது நம்மை அறியாமல் நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். அதனால் நானும் என் கணவர் சதீஷ் குமாரும் இலவம் பஞ்சு மெத்தைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

முதன் முதலில் என் கணவரின் தாத்தா தான் இந்தத் தொழிலை ஆரம்பித்தார். அவர் பஞ்சுக்காயினை வாங்கி அதைத் தான் பல மெத்தை நிறுவனங்களுக்கு சப்ளை செய்து வந்தார். அதன் பிறகு இந்தத் தொழிலில் என் மாமனார் தொடர்ந்தார். அவர் ஒரு படி மேலே சென்று காய் மட்டுமில்லாமல் காயில் இருந்த பஞ்சினை தனியாக பிரித்து அதனை விற்பனை செய்தார். பஞ்சு காய் மட்டும் என்றால் அது ஒரு விலை, அதையே பஞ்சாக மாற்றிக் கொடுத்தால் அதற்கு தனி விலை.

என் கணவர் இந்த தொழிலில் ஈடுபட ஆரம்பிக்கும் வரை என் மாமனார் பஞ்சினை விற்பனை செய்து வந்தார். நானும் என் கணவரும் இந்த தொழிலை கையில் எடுத்த பிறகு தான் இதனை மெத்தையாக விற்பனை செய்ய துவங்கினோம். மேலும் பஞ்சு விற்பனைதான் எங்களின் அடையாளம் என்பதால் சில மெத்தை நிறுவனங்களுக்கு நாங்க இன்றும் பஞ்சினை சப்ளை செய்து வருகிறோம்’’ என்றவர் இலவம் பஞ்சு மெத்தை தயாரிப்பு குறித்து விவரித்தார்.

‘‘நாங்க பவானியில் இருக்கோம். இந்தப் பகுதியில் பஞ்சு மரங்கள் கிடையாது. இங்கு அந்த மரங்கள் வளராது. அதனால் கம்பம், போடி போன்ற பகுதியில் உள்ள மலைப்பிரதேசங்களில் பஞ்சினை விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்திடுவோம். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட பஞ்சு காய்களில் உள்ள பஞ்சினை பிரிப்போம். அதில் விதைகள் இருக்கும். அதை ஒவ்வொன்றாக பிரிப்பது அவ்வளவு சுலபம் கிடையாது.

பஞ்சு காய்களையே மூட்டை மூட்டையாகத்தான் வாங்குவோம். அதனால் அதை பிரிப்பது சிரமம். அதனால் பஞ்சில் உள்ள விதைகளை பிரிக்க தனிப்பட்ட மெஷின் உள்ளது. அதில் பஞ்சினை போட்டால், விதையினை தனியாக பிரிப்பது மட்டுமில்லாமல், பஞ்சினையும் மிருதுவாக்கிடும். அவ்வாறு பிரிக்கப்பட்ட பஞ்சுகள் மேகக்கூட்டம் போல் ஒரு அறையில் சேமிக்கப்படும். அதனை மூட்டையில் ஐந்து கிலோ கணக்கில் கட்டி வைப்போம். பிறகு அதை மெத்தை மற்றும் தலையணையாக தைத்திடுவோம்.

அப்படி கையால் தைக்கப்படும் மெத்தை மற்றும் தலையணையை சரியான முறையில் பராமரித்து வந்தால் 15 வருடம் வரை நீடிக்கும். நாங்க ெமத்தையினை பாக்ஸ் டைப்பில்தான் தைக்கிறோம். இது சுத்தமான பஞ்சு என்பதால் அப்படியே ஒவ்வொரு பாக்சிற்குள் வைத்து திணிக்க வேண்டும். பிறகு கடைசியாக அனைத்தையும் சேர்த்து தைத்திடுவோம். இதனை முழுக்க முழுக்க கையால்தான் தைக்கிறோம். அதனால் மிகவும் உறுதியாக இருக்கும்.

மெத்தையின் மேல் துணி நாள்பட கிழியுமே தவிர தையல் பிரியவே பிரியாது. மேலும் இந்த மெத்தைகள் கட்டம் கட்டமாக இருப்பதால், இதில் படுக்கும் போது நம்முடைய உடலின் அமைப்புக்கு ஏற்ப உள்ளே திணிக்கப்பட்டு இருக்கும் பஞ்சுகள் வளைந்து ெகாடுக்கும். உடல் வலி ஏற்படாது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும். மேலும் வெயில் மற்றும் குளிர் காலத்திற்கு ஏற்ப இதன் தன்மை மாறும். அதாவது, வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் கதகதப்பாகவும் இருக்கும். சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப இலவம் பஞ்சுகள் தன் தன்மையை மாற்றிக்கொள்ளும்.

மெத்தைகளை மாதம் ஒருமுறை நன்றாக தட்டிவிட்டு வெயிலில் காயவைத்தால் போதும். வெயில் படும் போது, மெத்தைக்குள் இருக்கும் பஞ்சுகள் அனைத்தும் நன்கு காய்ந்து மிருதுவாகி புதிதாக மாறிடும். மெத்தையில் உள்ள பருத்தி பஞ்சு பழையதாகிவிட்டால் அதனை தலையணையாக மாற்றி தைத்துக்கொள்ளலாமே தவிர அதனுடன் புதிய பஞ்சு சேர்த்தால் மெத்தையின் தன்மை மாறிடும்.

இலவம் பஞ்சு மெத்தைகளை நல்ல முறையில் பராமரித்தால், நான் ஏற்கனவே சொன்னது போல் 15 வருடம் வரை நீடித்து உழைக்கும். நாங்க சிங்கிள் பெட் முதல் கிங் சைஸ் பெட் வரை அனைத்து சைஸ்களிலும் தயாரித்து தருகிறோம். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் தைத்து தருகிறோம். தமிழ்நாட்டில் எந்த இடத்திற்கும் டெலிவரியும் செய்கிறோம்’’ என்றவருக்கு ஆரம்பத்தில் இந்தத் தொழில் பற்றி எதுவும் தெரியாதாம்.

‘‘என்னுடைய சொந்த ஊர் சேவண்டியூர். கல்லூரி படிச்சு முடிச்சதும் எனக்கு கல்யாணமாயிடுச்சு. என் கணவரின் குடும்பத் தொழில் என்பதால், இங்கு வந்த பிறகுதான் நான் இதனைப் பற்றி ெகாஞ்சம் கொஞ்சமாக கற்றுக்ெகாண்டேன். பஞ்சு காய் விற்பனையில் ஆரம்பித்த இந்தத் தொழில் தற்போது ெமத்தை தயாரிப்பு மற்றும் விற்பனை வரை வளர்ந்துள்ளது. இன்றும் நாங்க சில மெத்தை நிறுவனங்களுக்கு பஞ்சினை சப்ளை செய்து வருகிறோம். நேரடி ஆர்டர் மட்டுமில்லாமல் பர்னிச்சர் கடைகளுக்கும் நாங்க மெத்தை சப்ளை செய்கிறோம். பலருக்கு இலவம் பஞ்சு குறித்த விழிப்புணர்வு இல்லை. அதனால் இந்த பஞ்சு மெத்தை குறித்து பலருக்கு தெரிய வைக்க வேண்டும்’’ என்றார் மோகனா.

தொகுப்பு: ஷம்ரிதி

The post சுகமான தூக்கத்திற்கு நாங்க கியாரன்டி! appeared first on Dinakaran.

Tags : Mohana ,Asati ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கு போர்ட்டோ கலவை பயிற்சி