×

திறமை இருந்தால் இடைவேளை தடையில்லை!

நன்றி குங்குமம் தோழி

‘‘படிப்பு, வேலை, சுய தொழில் என பெண்கள் தங்களின் கெரியரை நோக்கிப் பயணம் செய்கிறார்கள். குடும்பம், குழந்தைகள் என்றாலும், தங்களுக்கான ஒரு வழியினை ஏற்படுத்திக் கொள்ளவே பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால் 20% பெண்கள் குடும்பச்சூழல் காரணமாக தங்களின் வேலையினை விட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். வருடங்கள் கழிந்து மீண்டும் வேலைக்குச் செல்ல விரும்பும் போது, இன்றைய வேலைச்சூழலில் இருந்து பின்தங்கி இருப்பதால், நிறுவனங்கள் வேலை கொடுக்க முன் வருவதில்லை. அவர்களுக்கும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர முடியும்’’ என்கிறார் பவுன்டியஸ், ஐ.டி நிறுவனத்தின் துணைத் தலைவரான விஜயகுமார் தில்லி. கெரியரில் இருந்து விடுப்பு எடுத்த பெண்களுக்காக தங்களின் நிறுவனத்தில் ஒரு திட்டம் அமைத்து அதன் மூலம் திறமையானவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்கிறார்.

‘‘ஒரு நிறுவனத்தின் அடித்தளம் ஊழியர்கள். அவர்கள் திறமை தான் அந்நிறுவனத்தின் அடையாளம். எங்களைப் பொறுத்தவரை வேலையில் இடைவேளை இருந்தாலும் திறமை மற்றும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும், மறுவாய்ப்பு கொடுக்க நாங்க தயார்’’ என்றவர் பியான்ட் யுவர் பிரேக் (BYB)திட்டம் குறித்து விவரித்தார்.

‘‘ஐ.டி நிறுவனத்தில் ஒவ்வொரு வாரமும் சிறந்த வேலையாட்களை தேர்வு செய்து கவுரவிப்பது வழக்கம். அதன் அடிப்படையில் ஆய்வு செய்த போது, அந்த வார டார்கெட்டை அச்சீவ் செய்தவர்கள் வேலையில் இருந்து விலகி மீண்டும் இணைந்தவர்களாக இருந்தார்கள். எந்த துறையாக இருந்தாலும், இரண்டு வருட இடைவேளையிலே பல மாற்றங்கள் இருக்கும். இவர்களோ, பல வருட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வேலைக்கு சேர்ந்தவர்கள். மாற்றங்களை புரிந்து கொண்டு திறமையாக வேலை பார்க்கிறார்கள் என்பதை அறிந்தோம்.

அதன் அடிப்படையில் பார்த்த போது எங்க நிறுவனத்தில் 35 நபர்களை அதுவும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களை இந்த திட்டம் ஆரம்பிக்கும் முன்பே வேலைக்கு நியமித்து இருப்பது தெரிய வந்தது. அதில் ஒருவர் 19 வருட இடைவேளைக்குப் பிறகு இங்கு வேலையில் இணைந்து, திறமையாக செயல்பட்டு வருகிறார் என்று கண்டறிந்தோம். திறமை இருந்தால், எப்படிப்பட்ட மாற்றங்களையும் சமாளிக்க முடியும் என்பதை இவர்கள் நிரூபித்து இருந்தார்கள். இடைவேளைக்குப் பிறகு இவர்கள் வேலைக்கு வந்தாலும், ஆரம்பத்தில் மற்றவர்களுக்கு நிகராக வேலையில் ஈடுபட சிரமப்பட்டுள்ளார்கள். சிறப்புப் பயிற்சி கொடுத்தால், இவர்களும் மற்றவர்கள் போல் மெயின் ஸ்ட்ரீம் வேலையில் ஈடுபட முடியும். அதன் அடிப்படையில் துவங்கப்பட்டதுதான் BYB திட்டம்’’ என்றார்.

‘‘பெண்கள் வேலையில் இருந்து விலக முக்கிய காரணம் திருமணம் மற்றும் குழந்தைகள். திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு வந்தாலும், குழந்தை பிறந்தவுடன் வேலையினை ராஜினாமா செய்கிறார்கள். குழந்தைகள் வளர்ந்து அவர்கள் மீண்டும் வேலைக்கு போகலாம் என்று யோசிப்பதற்குள் ஐந்து வருடம் கடந்திருக்கும். இந்த இடைப்பட்ட காலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். உதாரணத்திற்கு அவுட்லுக் மூலம் இமெயில் அனுப்புவதே சிரமமாக இருக்கும்.

அப்படிப்பட்டவர்களை நிறுவனங்கள் மீண்டும் ஏற்க மறுப்பதால், தன்னம்பிக்கை இழந்துவிடுகிறார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்களுக்கு துறை சார்ந்த முன்னேற்றங்கள் குறித்து தெரியாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் எந்தப் பிரச்னை வந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளிக்கக்கூடிய அனுபவம் ஏற்பட்டு இருக்கும். அந்த அனுபவங்களை நாங்க நன்மையாக மாற்ற முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் 2021ல் BYB திட்டத்தினை ஆரம்பித்தோம்.

முதலில் ஆட் சேர்ப்பு நிறுவனங்களில் இத்திட்டம் குறித்து விவரித்தோம். அதன் அடிப்படையில் அவர்கள் ஆட்களை தேர்வு செய்து எங்களிடம் அனுப்புவார்கள். மேலும் எங்க நிறுவன இணையத்திலும் ஆட்கள் தேவை குறித்து விளம்பரம் வெளியிடப்படும். அதைப் பார்த்தும் விண்ணப்பிக்கலாம். முதலில் இடைவேளை காலத்தில் என்ன செய்தார்கள் என்று ஆய்வு செய்வோம். சிலர் மேற்கொண்டு படித்திருப்பார்கள், ஒரு சிலர் ப்ரீலான்ஸ் முறையில் வேலை பார்த்து இருப்பார்கள். வேலை கிடைக்காத காரணத்தால் வேறு வேலையில் ஈடுபட்டிருப்பார்கள். எதுவும் செய்யவில்லை என்றாலும், அவர்களுக்கு இன்றைய மார்க்கெட் நிலவரங்களை புரிந்து கொள்ளக்கூடிய திறமை இருக்கிறதா என்று பார்ப்போம்.

இந்தத் திட்டம் மூலம் பெண்கள் மீண்டும் வேலையில் சேர குறைந்தபட்சம் ஒரு வருடம் பிரேக் எடுத்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 13 முதல் 19 வருட பிரேக் எடுத்தவர்களை நாங்க வேலையில் நியமித்து இருக்கிறோம். இது ஐ.டி நிறுவனம் என்பதால் கண்டிப்பாக ஐ.டி துறையில் இரண்டு வருடம் வேலை பார்த்து இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆறு மாதம் இன்றைய மார்க்கெட் நிலவரத்தில் உள்ளது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

அவர்களுக்கு தனிப்பட்ட மென்டார் நியமிக்கப்பட்டு அவர்கள் மேலும் முன்னேற உதவி செய்வார்கள். தற்போது இந்தத் திட்டம் சென்னையில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூர், ஐதராபாத், குர்கான் போன்ற இடங்களிலும் அறிமுகம் செய்ய இருக்கிறோம். இந்த ஐந்து வருடங்களில் 150 பெண்களை வேலைக்கு நியமித்திருக்கிறோம். இனி ஒவ்வொரு வருடமும் 40 நபர்களை வேலைக்கு சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம்’’ என்றார் விஜய்.

காயத்ரி:

‘‘கல்லூரி கேம்பஸ் தேர்வு மூலம் 2009ல் வேலைக்கு சேர்ந்தேன். ஏழு வருடம் வேலை பார்த்து வந்தேன். வேலையில் இருந்து விலகும் போது முக்கிய பொறுப்பில் இருந்தேன். கணவருக்கு வெளிநாட்டில் வேலை என்பதால், வேலையை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. குழந்தைகள், குடும்பம் என ஆறு வருடம் கடந்தது. குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும், வெளிநாட்டில் வேலைக்கு முயற்சித்தேன் கிடைக்கவில்லை. அதன் பிறகு நாங்க இந்தியா வந்துவிட்டோம்.

இங்கு கிட்டத்தட்ட 70 வேலைக்கு விண்ணப்பித்திருப்பேன். 15க்கும் மேற்பட்ட நேர்காணலுக்கு சென்றிருப்பேன். எல்லோரும் நான் வேலையில் இருந்து விலகிய காரணத்தை முன்னிறுத்தி என்னை நிராகரித்தார்கள். அதுவே எனக்கு பெரிய அளவில் மன உளைச்சலை ஏற்படுத்தியது. அதனால் என்னை அப்கிரேட் செய்து கொள்ள படிச்சேன். அந்த சமயத்தில் தான் பவுன்டியஸில் வேலை வாய்ப்பு கேள்விப்பட்டு விண்ணப்பித்தேன். இவர்கள் என் திறமையை மட்டுமே ஆய்வு செய்தார்களே தவிர நான் வேலையில் இருந்து விலகியது குறித்து விசாரிக்கவில்லை. அதுவே என் மனசுக்கு ஆறுதலாக இருந்தது. மூன்று மாத பயிற்சிக்குப் பிறகு முழுநேர வேலையில் இணைந்தேன். இப்ப நான் இங்கு வேலைக்கு சேர்ந்து இரண்டரை வருடமாகிறது.’’

ரேவதி:

‘‘நான் BYB திட்டம் மூலமாகத்தான் இங்கு வேலையில் சேர்ந்தேன். இப்போது இந்தத் திட்டத்தினை தலைமை தாங்கி வருகிறேன். கல்லூரி கேம்பசில் ஐ.டி துறையில் ஒன்பது வருஷம் வேலை பார்த்தேன். குழந்தைக்காக ஏழு வருடம் பிரேக் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் இந்த பிரேக் எனக்கு நன்றாக இருந்தாலும், குழந்தை வளர்ந்த பிறகு கண்டிப்பாக வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்து கொண்ேட இருந்தது.

என் கணவரும் ஐ.டி துறை என்பதால், அவர் மற்றும் நண்பர்கள் மூலமாக மீண்டும் வேலையில் சேர என்னை தயார்படுத்த ஆரம்பித்தேன். முதல் கட்டமாக என் பயோடேட்டாவினை தயாரிக்கவே எனக்கு கடினமாக இருந்தது. இந்த ஏழு வருடங்களில் அதனை அமைக்கும் விதமே மாறுபட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து நான் இதற்கு முன் வேலை பார்த்த துறை சார்ந்து என் திறமையை மேம்படுத்திக் கொண்டேன். அந்த சமயத்தில்தான் முகநூல் வழியாக இங்கு வேலை வாய்ப்பு இருப்பது தெரிந்தது.

ஆனால் அந்த வேலைக்கும் எனக்கும் பெரிய இடைவேளை இருந்தாலும் விண்ணப்பித்தேன். என் திறமையை புரிந்துகொண்டு, என்னை வேலையில் நியமித்தார்கள். ஆறு மாதம் காண்ட்ராக்டில் வேலைக்கு சேர்ந்தேன். நாலு மாதத்தில் என்னுடைய திறனைப் பார்த்து நிரந்தரமாக்கப்பட்டேன். நான் சேர்ந்து இரண்டு வருடமாகிறது. இப்போது BYB திட்டத்தை தலைமை பொறுப்பில் வழி நடத்தி வருகிறேன்.’’

தொகுப்பு: ரிதி

The post திறமை இருந்தால் இடைவேளை தடையில்லை! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED மகிழ்ச்சியும் ஆனந்தமும் முக்கியம்