×

திருப்போரூர், குன்றத்தூரில் பிரம்மோற்சவ விழாவையொட்டி முருகன் கோயில்களில் தேரோட்டம் கோலாகலம்; வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்

குன்றத்தூர், பிப்.22: திருப்போரூர், குன்றத்தூர் முருகன் கோயில்களில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, தேரோட்ட விழா நேற்று நடந்தது. அதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று சாமி தரிசனம் செய்தனர். குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. தெய்வப்புலவர் சேக்கிழார் பெருமானால் பாடல் பெற்ற இத்தலத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

பின்னர், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழா நடைபெற்று வந்த நிலையில், 8ம் நாளான நேற்று முருகன் – வள்ளி, தெய்வானை தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, மலையின் மேல் இருந்து முருகனை பல்லக்கில் வைத்து, எடுத்து வந்து மலையின் கீழ் இருந்த தேரில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வான வேடிக்கைகள் முழங்க, பக்தர்கள் `அரோகரா, அரோகரா’ கோஷம் விண்ணை முட்ட தேரை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக இழுத்து சென்றனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், இத்தேரோட்டத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், ஊர் கூடி தேர் இழுப்பார்கள் என்பது பழமொழி. அதுபோன்று நேற்று தேரோட்டம் நடந்தபோது, தேரை இழுப்பதற்கு அதிமுக மற்றும் திமுகவினர் ஒன்று சேர்ந்து ஊர் பொதுமக்களுடன் இணைந்து கட்சி பேதமின்றி தேரை இழுத்து சென்றது பக்தர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இத்தேர் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு உபயதாரர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர் முக்கிய வீதி வழியாக உலா வந்த பின்பு தேர் கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோயில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா, கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரை கண்ணன் ஆகியோர் மேற்கொண்டனர்.
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசாமி கோயிலின் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த தேரில், காலை 9 மணியளவில் வள்ளி – தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார்.

அப்போது, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத தேரின் நான்கு சக்கரங்களுக்கு, பூஜை செய்யப்பட்டு பச்சைக்கொடி காட்டப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து, `அரோகரா, அரோகரா’ என கோஷத்துடன் இழுத்தனர். தேர் இழுத்துச் செல்லப்பட்ட நான்கு மாடவீதிகளிலும் பக்தர்கள் வழியெங்கும் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி வழிபட்டனர். திருவிழாவில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், எஸ்பி சாய் பிரனீத், மாமல்லபுரம் டிஎஸ்பி ரவி அபிராம், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பேரூராட்சி தலைவர் தேவராஜ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு சாமியை வழிபட்டனர்.

திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில், சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்து சமய அறநிலைய துறை சார்பில், இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் சக்தி காந்த பாரதிதாசன், கோயில் செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் தேரோட்ட விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடமாடும் கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தண்ணீர் டேங்கர் லாரி மூலம் நான்கு மாடவீதிகளிலும் தண்ணீர் பீய்ச்சியடித்து சுத்தப்படுத்தும் பணியும் பேரூராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது. தேரோட்டத்தையொட்டி, திருப்போரூர் நகரப்பகுதிக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து வாகனங்களும் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த தேர்த்திருவிழாவில் கலந்துக்கொண்டனர். முடிவில், மாலை 3 மணியளவில் தேர் நிலையை வந்தடைந்தது.

The post திருப்போரூர், குன்றத்தூரில் பிரம்மோற்சவ விழாவையொட்டி முருகன் கோயில்களில் தேரோட்டம் கோலாகலம்; வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,Kunradathur Chariot ,Murugan ,Brahmotsava ,Kunrathur ,Brahmotsava festival ,Kunrattur Murugan Temples ,Sami ,Murugan temple ,Kunradthur ,Tiruporur, Kunradthur ,
× RELATED செங்கல்பட்டு திருப்போரூர்...