×

மலக்கசடு, கழிவுநீரை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்கள் இயக்கம் ஒழுங்குபடுத்த புதிய சட்ட மசோதா தாக்கல்: 50,000 ரூபாய் வரை அபராதம்; உரிமம் ரத்தாகும்

பேரவையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்ட மசோதா ஒன்றை நேற்று அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: பல்வேறு இடங்களில் திறந்த வெளி சுற்றுச்சூழலிலும், நீர் நிலைகளிலும் பொறுப்பில்லாமல், மலக்கசடு மற்றும் கழிவுநீரை கொட்டுவது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே மலக்கசடுகள் மற்றும் கழிவுநீரை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், இழுவை வண்டிகள் அல்லது வேறு வண்டிகளின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதும், கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதும் அவசியமாகிறது. அதற்கேற்ற வகையில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின், மலக்கசடு மற்றும் கழிவுநீர் மேலாண்மை பிரிவை திருத்துவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

இதன்படி, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உரிமம் இல்லாமல், அந்தந்த ஊராட்சி எல்லைக்குள் உள்ள குடியிருப்பு அல்லது வணிக நிறுவன கட்டிடங்களில் இருந்து வாகனங்களில் மலக்கசடு அல்லது கழிவுநீரை சேகரித்து கொண்டு செல்லவோ அப்புறப்படுத்தவோ கூடாது. ஆனால் அதை அகற்றுவதற்கோ, கொண்டு செல்வதற்கோ, உள்ளாட்சி அமைப்பு அல்லது சட்டப்பூர்வமான வாரியத்திற்கு உரிமம் தேவை இல்லை. மலக்கசடு அல்லது கழிவுநீரை சேகரிக்கப்படும் கட்டிடத்தின் உரிமையாளர், அங்குள்ள செப்டிக் டேங்க் அல்லது கழிவுநீர் தொட்டியை தேசிய கட்டிட நெறிகளுக்கு ஏற்ப அமைத்திருக்க வேண்டும். உரிமம் இல்லாதவர் அந்த கழிவுகளை அப்புறப்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்வதில் யாரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பணியமர்த்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். கழிவை அகற்றும் வசதியை பெறுவதற்காக ஒரு நடைக்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். அடையாளம் காட்டப்பட்டுள்ள இடங்களைத் தவிர வேறு இடங்களில் கழிவுகள் கொட்டப்படாமல் இருப்பதை மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கண்காணிக்க வேண்டும். அதற்காக அந்த குறிப்பிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்ட புவி இடம்காட்டியை ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த சட்டப் பிரிவை மீறி, முதல் முறை செய்யப்படும் குற்றத்திற்காக ரூ.25 ஆயிரமும், 2வது அல்லது தொடர்ச்சியாக செய்யப்படும் குற்றங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். 2வது குற்றத்திற்கான தண்டனை விதிக்கப்படும்போது, உரிமத்தை ரத்து செய்வதற்கான பரிந்துரையை மாவட்ட கண்காணிப்புக் குழு அளிக்கலாம். குற்றம் செய்ய பயன்படுத்தப்பட்ட வாகனம், அதிலுள்ள மோட்டார், குழாய் உள்ளிட்ட உபகரணங்களை கைப்பற்றலாம். ஊராட்சி உதவி இயக்குநர் அதை பறிமுதல் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மலக்கசடு, கழிவுநீரை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்கள் இயக்கம் ஒழுங்குபடுத்த புதிய சட்ட மசோதா தாக்கல்: 50,000 ரூபாய் வரை அபராதம்; உரிமம் ரத்தாகும் appeared first on Dinakaran.

Tags : Malakkasu ,Minister of Rural Development ,Berawai, ,I. Peryasami ,Malakasadu ,Dinakaran ,
× RELATED மாநில தேர்தல் ஆணையரின் பதவி காலம் 5...