×

ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகள் தர மறுப்பு கச்சத்தீவு ஆலய திருவிழாவுக்கு இந்திய பக்தர்கள் செல்வது ரத்து

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா நாளை (பிப்.23) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து 8 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு செல்வதற்கு பதிவு செய்திருந்த 3,255 பக்தர்களுக்காக 73 விசைப்படகுகள், 24 நாட்டுப்படகுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. கச்சத்தீவு செல்லும் பக்தர்களுக்கான அடையாள அட்டை தயாரிக்கும் பணிகளில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 ராமேஸ்வரம் மீனவர்களில் 20 பேருக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து விடுதலை அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மீதமுள்ள 3 மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கவும் முடிவு செய்தனர். மேலும் பக்தர்கள் கச்சத்தீவு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த படகுகளையும் பயணத்திற்கு வழங்க முடியாது என மீனவர் சங்கங்கள் தெரிவித்து விட்டன.

இதுகுறித்து ராமேஸ்வரம் வேர்க்கோடு பாதிரியார் சந்தியாகு கூறுகையில், ‘ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பக்தர்கள் செல்வதற்கு படகுகளை வழங்க மறுத்து விட்டனர். இதனால் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு ராமேஸ்வரத்தில் இருந்து இந்திய பக்தர்கள் செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது. படகுகளில் கச்சத்தீவு செல்வதற்கு பதிவு செய்திருந்த அனைத்து பக்தர்களிடமும் பெறப்பட்ட கட்டணத் தொகை திரும்ப வழங்கப்படும்,’என்றார். இந்நிலையில், கச்சித்தீவுக்கு பைபர் படகில் செல்ல அனுமதி கோரி ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரின்சோ ரேமண்ட் என்பவர் தொடர்ந்த வழக்கில், ராமநாதபுரம் கலெக்டர் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

The post ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகள் தர மறுப்பு கச்சத்தீவு ஆலய திருவிழாவுக்கு இந்திய பக்தர்கள் செல்வது ரத்து appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Kachchathivu ,Kachchathivu Anthonyyar festival ,India ,Sri Lanka ,Kachchathivu temple festival ,
× RELATED திருச்சி-ராமேஸ்வரம் சாலையில் விபத்தை...