×

சென்னையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ரயிலில் இருந்து வீசியதாக பொய் செய்தி பீகார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு: மாநகர காவல்துறை நடவடிக்கை

சென்னை: சென்னையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ரயிலில் இருந்து தூக்கி வெளியே வீசியதாக பொய் செய்தி பரப்பிய ‘நியூஸ் 18 பீகார்’ நிறுவனத்தின் மீது மாநகர காவல்துறை 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னை மாநகர காவல்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 19ம் தேதி ‘நியூஸ் 18 பீகார்’ டிவிட்டர் ஹேண்டிலில்(@நியூஸ் 18 பீகார்) இந்தியில் டிவிட் செய்து, 48 நொடிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், சென்னையில் ஓடும் ரயிலில் இருந்து 2 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குற்றவாளிகளால் தூக்கி வெளியே எறியப்பட்டதாகவும், இதன் விளைவாக ஒருவர் உயிரிழந்தார் என்றும், மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அவர்களது முகநூல் பக்கத்திலும் மற்றும் யூடியூப் சேனலிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இறந்த நபரின் உடல் அடங்கிய சவப்பெட்டி அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய செய்தி முற்றிலும் தவறானது. இது போன்ற காணொலிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்கவும், ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பரப்பட்டுள்ளது என்பதையும், இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் சென்னை பெருநகர காவல் எல்லையில் நடக்கவில்லை என்பதனையும் சென்னை பெருநகர காவல்துறை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

இதுபற்றிய விசாரணையில், கடந்த பிப்.6ம் தேதி பீகார் மாநிலம் கிழக்கு சாம்ப்ரான் மாவட்டத்தை சேர்ந்த மோகன் மஹ்தோ கிராம் துர்காலியா என்பவர் விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் எண்: 60208ல், நடைமேடை 2ல் இருந்து ரயிலின் மேலே ஏறிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து விழுப்புரம் ரயில்வே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் மாவட்ட காவல்துறை அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து பீகார் மாநிலம் பாட்னா வரை தடையில்லா சான்று வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றம் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வழக்கில் பிறப்பித்த உத்தரவில், ‘வெறுக்கத்தக்க பேச்சுகள் மீது தானாக முன் வந்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தவறான செய்திகளை வெளியிட்ட ‘நியூஸ் 18 பீகார்’ நிறுவனத்தின் மீது சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சார்பில் ஐபிசி 153, 153(எ)(1)(எ), 505(1)(பி), 505(2) ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post சென்னையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ரயிலில் இருந்து வீசியதாக பொய் செய்தி பீகார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு: மாநகர காவல்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Bihar ,Chennai ,News 18 Bihar ,Chennai Municipal Police ,Bihar Company ,Dinakaran ,
× RELATED சென்னை ரவுடிகளுக்கு துப்பாக்கிகள்...