×

பலாத்கார காட்சிகள் பென்டிரைவை திறந்து பார்த்ததாக புகார் விசாரணை அறிக்கையை நடிகைக்கு வழங்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: பிரபல மலையாள சினிமா நடிகை ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகையின் முன்னாள் கார் டிரைவரான சுனில்குமார் என்பவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் நடிகையை பலாத்காரம் செய்வதற்கு பிரபல மலையாள நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நடிகையை பலாத்காரம் செய்த அந்தக் கும்பலை சேர்ந்தவர்கள் பலாத்கார காட்சிகளை செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் அதை பென்டிரைவில் காப்பி செய்தனர். பலாத்காரக் காட்சிகளை வீடியோ எடுத்த செல்போனை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தீவிர விசாரணையில் பென்டிரைவ் மட்டும் போலீசுக்கு கிடைத்தது. பின்னர் அதை விசாரணை நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்த பென்டிரைவை சிலர் திறந்து பார்த்துள்ளனர் என்றும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து நடிகையின் புகார் குறித்து விசாரணை நடத்த எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் பென்டிரைவை திறந்து பார்த்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை கேரள நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் பென்டிரைவை திறந்து பார்த்தது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையின் நகலை தனக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.இதற்கிடையே நடிகர் திலீப்பும் உயர்நீதிமன்றத்தில் மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், விசாரணை அறிக்கையை ரகசியமாக வைக்க வேண்டும். நடிகைக்கு அதை வழங்கக் கூடாது.

நடிகைக்கு அதை வழங்கினால் தனக்கும் ஒரு நகல் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை அறிக்கை நகலை பாதிக்கப்பட்ட நடிகைக்கு வழங்க எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. மேலும் நடிகர் திலீப்பின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

The post பலாத்கார காட்சிகள் பென்டிரைவை திறந்து பார்த்ததாக புகார் விசாரணை அறிக்கையை நடிகைக்கு வழங்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kerala High Court ,Thiruvananthapuram ,Thrissur ,Kochi ,Sunilkumar ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...