×

மாவட்டத்தில் 654 பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி

*சிலம்பம், கராத்தே, ஜூடோ, தேக்வாண்டோவில் அசத்தல்

சேலம் : சேலம் மாவட்டத்தில் 654 நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி மட்டுமின்றி பல்வேறு இணைச் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பள்ளி மாணவிகள் அனைத்து சூழலையும் பக்குவமாக எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் திறனை வளர்க்க தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

கராத்தே, ஜூடோ, தேக்வாண்டோ மற்றும் சிலம்ப பயிற்சிகள் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை அதிகரிப்பதுடன், அவர்களின் பாதுகாப்பிற்கும் ஏதுவாக அமைந்துள்ளது.நடப்பு 2023-2024ம் கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் உள்ள 13,208 பள்ளிகளில் தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றில், 6,941 அரசு நடுநிலைப்பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலும், 6,267 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும் பயிலும் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இதற்காக ரூ.19.81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 654 பள்ளிகளில் மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் நடப்பாண்டு அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியாளர்களுக்கான ஊதியம் மற்றும் மாணவர்களுக்கான சிற்றுண்டிக்கு என, ஒவ்வொரு பள்ளிக்கும் மாதம் ரூ.5,000 வீதம் 3 மாதங்களுக்கு ரூ.15,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், பயிற்சியாளர்களுக்கான ஊதியமாக ரூ.4,000 வழங்கப்படுகிறது. அத்துடன் பயிற்சிபெறும் மாணவிகளுக்கு பழ வகைகள், ஊட்டச்சத்து உணவுகள் என சிற்றுண்டி செலவிற்கு ரூ.1,000 என ஒவ்வொரு பள்ளிக்கு வழங்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 359 நடுநிலைப்பள்ளிகளிலும், 295 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் என மொத்தம் 654 பள்ளிகளில், 40 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக நடப்பாண்டு ரூ.98.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கராத்தே, ஜூடோ, தேக்வாண்டோ, சிலம்பம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று, அந்தந்த பள்ளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப வாரத்தில் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. மொத்தம் 3 மாதங்களுக்கு இப்பயிற்சி கற்றுத்தரப்படும்.

மாணவிகளை பொறுத்தவரை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதல்படி விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு பயிற்சியளிப்பதில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. மாணவிகள் அன்றாடம் பயன்படுத்தும் ஆடை மற்றும் பிற பொருட்களான கீ-செயின், துப்பட்டா, மப்ளர், பேக், பேனா, பென்சில், நோட்டு புத்தகம் ஆகியவற்றை, கருவிகளாகக் கொண்டு ஆபத்து காலங்களில் தங்களை தற்காத்துக் கொள்ளும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதில் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று கலைகளை கற்று அசத்தி வருகின்றனர். இவ்வாறு அதிகாரிகள்  தெரிவித்தனர்.

The post மாவட்டத்தில் 654 பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Silambam ,Karate ,Judo ,Taekwondo ,Salem ,Salem district ,Tamil Nadu ,
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு