×

கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஊழியர் சங்கத்தினர் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம்

*சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது

சித்தூர் : சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சித்தூர் மாவட்ட அனைத்து அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சித்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சித்தூர் மாவட்ட ஏபிஎன் ஜிஓ ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராகவுலு பேசியதாவது: மாநில முதல்வர் ஜெகன்மோகன் 2019ம் ஆண்டு தேர்தலின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதி அளித்தார்.

இதனால் அரசு பணியாளர்கள் அனைவரும் அவருடைய கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தனர். ஆனால் அவர் முதலமைச்சர் ஆகி 5 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதே போல் கடந்த 4 ஆண்டுகளாக சம்பளம் உயர்வு பிஆர்சி வழங்கப்படவில்லை. அரசு ஊழியர்களின் பிஎப் நிதியை முதல்வர் ஜெகன்மோகன் நவரத்தின என்கிற நலத்திட்டத்திற்கு மற்றும் அரசின் பல்வேறு நல திட்டங்களுக்கு ₹4300 கோடி பயன்படுத்தி உள்ளார்.

நிலுவையில் உள்ள டிஏ தொகை கடந்த 5 ஆண்டுகளாக மாநில அரசு இதுவரை அரசு ஊழியர்களுக்கு வழங்கவில்லை. இதனை கண்டித்து பலமுறை அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநில அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை. ஆகவே மாநில அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் கடந்த 14ம் தேதி முதல் கருப்பு பேட்ச் அணிந்து பணி புரிந்து கொண்டே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

இன்று மாநில அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநில முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இனியாவது மாநில அரசு உடனடியாக அனைத்து ஊழியர் சங்க தலைவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி எங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் மாநிலம் முழுவதும் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். வரும் தேர்தலில் ஜெகன்மோகன் கட்சிக்கு நாங்கள் தகுந்த பாடம் கற்பிப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஏபிடிஎப் ஊழியர் சங்கம், யூடிஎப் ஊழியர் சங்கம் மற்றும் ஏபிடிஓ ஊழியர் சங்கம் உள்பட பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கங்கள், சங்க தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஊழியர் சங்கத்தினர் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Chittoor Collector's Office ,Chittoor ,All Employees Association of Chittoor District ,All Government Employees Association ,Dinakaran ,
× RELATED நடைபெற உள்ள பொதுத்தேர்தலில்...