×

திண்டுக்கல்லில் குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை

திண்டுக்கல் : திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள பயணிகள் நிழற்குடை குடிமகன்களின் கூடாரமாக மாறி உள்ளதால் அந்தப் பகுதியில் செல்லும் பொதுமக்கள் முகம்சுளிக்கும் நிலை உள்ளது. இதனால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.திண்டுக்கல் சிலுவத்தூர் ரோடு ரவுண்டு ரோட்டில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இவ்வழியாக ஜம்புளியம்பட்டி, அதிகாரிப்பட்டி, சிலுவத்தூர், செங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் செல்கின்றன. அந்த பேருந்துகளில் செல்வதற்கு பயணிகள் இந்த நிழற்குடையில் நின்று தான் பஸ் ஏறி செல்ல வேண்டும். இந்நிலையில் இங்கு உள்ள பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் சேதம் அடைந்துள்ளது.

இதனால் இந்த பகுதியில் உள்ள பெண்கள், பள்ளி மாணவர்கள் அமர முடியாமல் பஸ் வரும் வரை நிற்கும் வேண்டிய நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் குடிமகன்கள் உட்கார்ந்து மது குடிப்பதாலும், நிழற்குடையில் மதுபாட்டில்கள் கிடப்பதாலும் பெண்கள், மாணவர்கள் நிழற்குடைக்குள் பெண்கள், மாணவ, மாணவிகள் செல்லாமல் வெயிலில் காத்திருக்கின்றனர். மழை நேரங்களில் நனைந்தபடி பேருந்துகளுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறுகையில்,“கடந்த அதிமுக ஆட்சியில் தரமற்ற முறையில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. சில மாதங்களிலேயே இருக்கைகள் உடைந்து பயணிகள் அமர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது நிழற்குடை மது அருந்தும் கூடமாகவும், சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும் மாறி உள்ளது. மேலும் இரவு நேரங்களில் மது பிரியர்கள், மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர்.

இதனால் நிழற்குடையின் அருகே நிற்பதற்கு கூட பொதுமக்கள் யோசிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நிழற்குடையின் இருக்கைகளை சரி செய்து பயணிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றித்தர வேண்டும்’’ என்றனர்.

The post திண்டுக்கல்லில் குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dindigul Round Road ,Nizhalkudai ,Dindigul Siluvathur road ,
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்