×

ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல வாகன வசதி

ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் பள்ளிக்கு வந்துச் செல்லும் வகையில் வாகன வசதி ஏற்படுத்தப்பட்டள்ளது.
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் பெரும்பாலான கிராமங்கள் மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்துள்ளன. இதனால், பள்ளிகளுக்கு வந்துச் செல்ல தனியார் பள்ளிகள் வாகன வசதிகளை ஏற்படுத்தியுள்ளன.

அதேசமயம், அரசு பள்ளிகளில் இது போன்று வாகன வசதிகள் இல்லாத நிலையில், மாணவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே, பெரும்பாலான பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்த்து விடுகின்றனர். இதனால், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த தற்போது பெரும்பாலான பள்ளிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பள்ளிகளுக்கு தொலை தூரங்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் சிரமம் இன்றி வந்துச் செல்ல ஏற்றவாறு வாகன வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 30 மாணவர்கள் மட்டுமே இருந்த நிலையில், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷோபா மற்றும் ஆசிரியர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக தற்போது 150 மாணவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். குளிச்சோலை, போர்டுமட்டம், பகலாமந்து, தேனாடுமந்து, இந்திரா நகர், ஓடைக்காடு, மார்லிமந்து, கோழிப்பண்ணை போன்ற பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தற்போது இந்த பள்ளியில் பயன்று வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு வந்துச் செல்ல சிரமமாக இருந்த நிலையில் எஸ்எஸ்ஏ மூலம் 52 மாணவர்கள் வாகனத்தில் செல்ல நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த மாணவர்கள் வாகனங்களின் மூலம் வந்துச் செல்கின்றனர்.

மீதமுள்ள மாணவர்கள் வாகன வசதியின்றி தவித்து வந்தனர். இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி, இந்த பள்ளியின் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பெற்றோர்கள் மற்றும் சில சமூக ஆர்வலர்கள் இணைந்து இந்த பள்ளிக்கு தற்போது ஜீப் ஒன்று வாங்கியுள்ளனர். அதன் மூலம் நாள்தோறும் இந்த பள்ளிக்கு தொலை தூரங்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகளை அழைத்து வருகின்றனர். இதனால், மாணவர்களும் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்துச் செல்கின்றனர்.

அரசு பள்ளிகளின் தரம் உயர்த்துவதற்காகவும், மாணவர்களின் சேர்க்கைக்காக பல்வேறு நடவடிக்கைகள் அரசு எடுத்த போதிலும், இது போன்று ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு வாகன வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளது பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல வாகன வசதி appeared first on Dinakaran.

Tags : Odaikkadu Panchayat Union Middle School ,Ooty ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED தாவரவியல் பூங்காவில் மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணி தீவிரம்