×

அம்பையில் ஆக்கிரமிப்பு இடத்தில் இயங்கிய வாரச்சந்தை கடைகள், வியாபார நிறுவனங்கள் அகற்றம்

*நகராட்சி நிர்வாகம் அதிரடி

அம்பை : அம்பையில் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்பு இடத்தில் இயங்கி வந்த வாரச்சந்தை கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் கட்டிடங்களை நேற்று நகராட்சி நிர்வாகம் அதிரடியாக இடித்து அகற்றியது.அம்பையில் ஸ்டேட் பாங்க் அருகே நீண்ட காலமாக தனியார் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த சந்தை ஒவ்வொரு வாரம்தோறும் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயங்கி வந்தது.

இதனால் இப்பகுதி சந்தை பஜார் என விளங்கியது. இச்சந்தையில் அம்பை மற்றும் சுற்றுப்புற கிராமங்களான ஆலடியூர், மன்னார்கோவில், பிரம்மதேசம், சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொட்டல், மூலச்சி ஆகிய பகுதியில் உள்ள விவசாயிகள் கடைகள் அமைத்து இலை, வாழைக்காய், காய்கறிகள், பழங்கள், தேங்காய், பலசரக்கு ஆகிய பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில் இந்த இடம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனி நபருக்கும், அரசுக்கும் இடையே நடைபெற்று வந்த வழக்கில் அம்பை வருவாய் கிராமம், புல எண் 371ஏ/1 மற்றும் 370ஏ/1 ஆகியவற்றில் அமைந்துள்ள சந்தை இடம், அரசுப் புறம்போக்கு நிலம் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் செயலாணையின் படி அந்த இடம் அரசுப் புறம்போக்கு என்று உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து சந்தை இடத்தில் அமைந்துள்ள கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் இருந்த கட்டிடங்களை பிப்.20ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று அம்பை நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் அனைத்துக் கடைகளுக்கும் அறிவிப்பு வழங்கினார். இதன்படி நேற்று (20ம்தேதி) காலையில் ஜேசிபி மற்றும் நகராட்சி வாகனங்களுடன் வந்த நகராட்சி பணியாளர்கள் சந்தை கடைகளை அகற்றும் பணியை அதிரடியாக தொடங்கினர்.

கடைசி நாள் வரை காலி செய்யாமல் இருந்த வியாபார நிறுவன கடைக்காரர்கள் தங்களது பொருட்களை அவசர அவசரமாக அள்ளிப்போட்டு காலி செய்தனர். இதனால் பதற்ற நிலை நிலவியது. இதையொட்டி அம்பை இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். நகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு காணப்பட்டது.

The post அம்பையில் ஆக்கிரமிப்பு இடத்தில் இயங்கிய வாரச்சந்தை கடைகள், வியாபார நிறுவனங்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Ambai ,Bank ,
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு