×

திருவட்டார் அருகே போதையில் தகராறு தாய்மாமனை சுத்தியலால் தாக்கி கொன்றது ஏன்?

*கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்

குலசேகரம் : திருவட்டாரை அடுத்துள்ள செங்கோடி சதவிளை தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஸ்டான்லி அருள் தம்பி (51). ரப்பர் பால்வெட்டும் தொழிலாளி. அவருக்கு திருமணமாகி 2 மகள், ஒரு மகன் உள்ளனர். அவரது சகோதரி மகன் அதே பகுதியை சேர்ந்த செல்வின் ஜெபகுமார் (41). மகாராஷ்டிராவில் ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மனைவி பிரிந்து சென்று விட்டார்.

செல்வின் ஜெபகுமாருக்கும், ஸ்டான்லி அருள் தம்பிக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சொந்த ஊருக்கு வந்திருந்த செல்வின் ஜெபக்குமாருக்கும், ஸ்டான்லி அருள் தம்பிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் செல்வின் ஜெபக்குமார் சுத்தியலால் தாய் மாமனான ஸ்டான்லி அருள் தம்பியை சரமாரியாக தாக்கி கொன்றுவிட்டார்.

இதுதொடர்பாக திருவட்டார் போலீசார் செல்வின் ஜெபக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது செல்வின் ஜெபக்குமார் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நான் 1 முதல் 10 வரை ஆங்கில மீடியம் படித்தேன். படிக்கும் போதே குடிப்பழக்கம் ஏற்பட்டதால் பால்வெட்டும் தொழிலுக்கு சென்றேன்.கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பக்கத்து வீட்டில் உள்ள எல்சியை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். தற்போது 16 வயது மகள் 11ம் வகுப்பு படித்து வருகிறார். குடிப்பழக்கம் காரணமாக 8 ஆண்டுகளுக்கு முன் மனைவி, மகள் பிரிந்து சென்று விட்டனர். அதன்பின்னர் பால் வெட்டும் தொழிலுக்கு மகாராஷ்டிராவுக்கு சென்றுவிட்டேன்.

இந்நிலையில் தாய் மாமன் ஸ்டேன்லி அருள்தம்பி மற்றொரு உறவினர் சொத்தை அபகரித்ததால் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஏன் அடுத்தவர் சொத்தை அபகரித்து வைத்துள்ளீர் என அவரது வீட்டிற்கு சென்று தகராறு செய்வேன்.அவரது வீடு புகுந்து தாக்கியது தொடர்பாக திருவட்டார் காவல்நிலையத்தில் ஸ்டேன்லி அருள்தம்பி புகார் செய்தார். இதனால் மகாராஷ்டிராவுக்கு தப்பிச்சென்று விடுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஊருக்கு வந்த நிலையில் சம்பவத்தன்று தாய் மாமன் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.
அப்போது என் வீட்டில் இருந்த நான் அவரை அழைத்து ஏன் சொத்தை கொடுக்க வேண்டியது தானே என்று கேட்டேன். அப்போது அவர் என்னை ஏளனமாக பேசியதால் கையில் மறைத்து வைத்திருந்த சுத்தியலால் தாக்கினேன்.

அவர் கீழே விழுந்ததும் சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்ததால் தப்பி ஓடிவிட்டேன். இரவில் சித்திரங்கோடு பகுதியில் கடை வராண்டாவில் படுத்து விட்டு நேற்று கேரள தப்ப முயன்ற போது வேர்கிளம்பியில் வைத்து போலீசார் என்னை கைது செய்தனர். என்று செல்வின் ஜெபக்குமார் கூறியதாக போலீசார் கூறியுள்ளனர்.

The post திருவட்டார் அருகே போதையில் தகராறு தாய்மாமனை சுத்தியலால் தாக்கி கொன்றது ஏன்? appeared first on Dinakaran.

Tags : Tiruvattar ,Kulasekaram ,Stanley Arul Thambi ,Sengodi Sathavila Thoppa ,Thiruvattar ,
× RELATED குலசேகரம் அருகே காதல் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் தற்கொலை