×

கரூரில் நடந்த கொலை வழக்கு: குற்றவாளிகள் 5 பேர் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் சரண்

ராமநாதபுரம்: கரூர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை ஆஜராகி விட்டு திரும்பிய மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த ராமர் பாண்டி என்ற ராமகிருஷ்ணன் (36) தலை துண்டி, முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் இன்று முதுகுளத்தூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே புளியங்குளத்தை சேர்ந்த சிலர் காரில் கடந்த 2012 அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவிற்காக ராம்நாதபுரம் மாவட்டம், பசும்பொன் னிற்கு சென்று விட்டு ஊர் திரும்ப கொண்டிருந்தனர் .

மதுரை சிந்தாமணி புற காவல் நிலையம் அருகே வந்தபோது கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் புளியங்குளத்தை சேர்ந்த ஜெயபாண்டி, சுந்தரபாண்டியன் உட்பட 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேல அனுப்பானடி சேர்ந்த ராமர் என்கின்ற ராமகிருஷ்ணன் தலைமையில் அனுப்பானடியை சேர்ந்த மோகன், கிளி கார்த்திக் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது .

அவர்கள் கைது செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் பெற்று கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் கையொப்பமிட்டு வந்தனர். இவர்களில் ராமர் என்ற ராமகிருஷ்ணன் ,கிளி கார்த்திக் மதுரையில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறியதை தொடர்ந்து, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி கையொப்பமிட்டு வந்தனர். இந்த நிலையில் வழக்கம்போல் கரூர் நீதிமன்றத்தில் ஆஜரவதற்காக ராமகிருஷ்ணனும், கிளி கார்த்திக்கும் இருசக்கர வாகனத்தில் திங்கட்கிழமை அதிகாலை வந்தனர் .

கரூர் நீதிமன்றத்தில் காலை 11 மணிக்கு ஆஜராகி கையொப்பமிட்ட பிறகு இருவரும் மதுரை நோக்கி சென்றனர். இவர்கள் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி அருகே தேரப்பாடி என்னுமிடத்தில் திடீரென காரில் வந்த ஒரு கும்பல் இருசக்கர வாகனத்தை மறித்து, பின்னர் இறங்கி வந்த அந்த கும்பல் ராமகிருஷ்ணன், கிளி கார்த்திகையும் ஆயுதங்களால் வெட்டியது, இதில் ராமகிருஷ்ணன் தலை துண்டித்து கொடூரமாக முகம் சிதைக்கப்பட்டு, தப்பி ஓடியது.பலத்த காயமடைந்த கிளி கார்த்திக் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி மதுரை கருப்பாயூரணி சேதுராமன் மகன் வினோத் கண்ணன் (26), கீரனூர் வீரணன் மகன் மகேஷ் குமார்(24), மேலூர் ராமஜெயம் மகன் தனுஷ் (21), ஆண்டார் கொட்டாரம் முருகேசன் மகன் தர்மா (25), மற்றும் ஆண்டார் கொட்டாரம் ரமேஷ் (23)ஆகியோர் இன்று காலை ராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சரணடைந்தனர்.

The post கரூரில் நடந்த கொலை வழக்கு: குற்றவாளிகள் 5 பேர் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.

Tags : Mudukulathur court ,Ramanathapuram ,Ramar Pandi ,Ramakrishnan ,Madurai Mela Pattanadi ,Karur court ,Mudhukulathur ,Karur ,Mudhukulathur court ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...