×

களக்காடு, முண்டந்துறை காப்பகத்தில் கணக்கெடுப்பு பணி புலிகள் கணக்கெடுக்க 900 கேமராக்கள் பொருத்தம்

*கள இயக்குனர் மாரிமுத்து தகவல்

விகேபுரம் : நெல்லை மாவட்டம், களக்காடு, பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 900 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு, புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், கடமான், ராஜநாகம், கருமந்தி, சிங்கவால்குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள வனவிலங்குகள் குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படுகிறது.

இந்தாண்டு பருவமழைக்கு பிந்தைய புலி மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்குகிறது.இதையொட்டி கணக்கெடுப்பவர்களுக்கான பயிற்சி முகாம் புலிகள் காப்பக கள இயக்குனர் மாரிமுத்து தலைமையில் நடந்தது. முண்டந்துறை வனச்சரகர் கல்யாணி, பாபநாசம் வனச்சரகர் சத்தியவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி வரவேற்றார். வன உயிரியலாளர்கள் ஸ்ரீதர், ஆக்னஸ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இதில் வனவர்கள் ராஜன், பிரபாகர், சுரேஷ் பாலமுருகன், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். தலையணையில் நடந்த பயிற்சி முகாமில் துணை இயக்குனர்கள் நெல்லை இளங்கோ, களக்காடு ரமேஷ்வரன் முன்னிலை வகித்தனர். சூழலியலாளர் ஸ்ரீதர், உயிரியலாளர் ஆக்னஸ் ஆகியோர் எப்படி கணக்கெடுப்பது என்பது குறித்து பயிற்சி அளித்தனர். இதில் வனசரகர்கள் கோதையாறு வேலுச்சாமி, திருக்குறுங்குடி யோகேஸ்வரன், வனவர்கள் களக்காடு ஸ்டாலின் ஜெபக்குமார், கோதையாறு ஜாக்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கணக்கெடுப்பு குழுவினர்களுக்கு செல்போன், உபகரணங்களை கள இயக்குனர் மாரிமுத்து வழங்கினார். அதன்பின் வனத்துறை ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் 21 குழுக்களாக பிரிக்கப்பட்டு, களக்காடு வனச்சரகத்திற்கு 8 குழுவினரும், திருக்குறுங்குடி வனச்சரகத்திற்கு 8 குழுவினரும், கோதையாறு வனச்சரகத்திற்கு 5 குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். முண்டந்துறை வனச்சரகத்தில் 13 இடங்களிலும், அம்பை வனச்சரகத்தில் 6 இடங்களிலும், பாபநாசம் வனச்சரகத்தில் 4 இடங்களிலும், கடையம் வனச்சரகத்தில் 7 இடங்களிலும் உள்ளிட்ட 30 இடங்களில் கணக்கெடுக்கும்படி நடைபெறுகிறது. ஒரு இடத்தில் வனக்காப்பாளர், வனக்காவலர், வேட்டை தடுப்பு காவலர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் இன்று (21ம்தேதி) முதல் 26ம் தேதி வரை வனப்பகுதியில் தங்கியிருந்து வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்கள், கால்தடங்களை சேகரித்தல் போன்ற முறைகளில் கணக்கெடுப்பு நடத்துகின்றனர். மேலும் கணக்கெடுப்பு பணியில் செல்போன் ஆப் பயன்படுத்தப்படுகிறது. கணக்கெடுப்பு குழுவினர் தாங்கள் சேகரிக்கும் புள்ளி விபரங்களை செல்போன் ஆப்பில் பதிவு செய்கின்றனர்.

கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் வனவிலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள் தேசிய புலிகள் ஆணையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தொடர்ந்து கணக்கெடுக்கும் பணியை கள இயக்குனர் மாரிமுத்து தொடங்கி வைத்து கூறியதாவது, கணக்கெடுக்கும் பணி இரு முறையாக நடைபெறுகிறது. ஒன்று வன விலங்குகளை நேரடியாக பார்த்து கணக்கெடுப்பது, மற்றொன்று எச்சம், கால்தடம் போன்றவைகள் மூலம் கணக்கெடுப்பது. முதல் மூன்று நாட்கள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பீட்டில் இருந்து 5 கி.மீ. நடந்து சென்றும், அடுத்த 3 நாட்கள் நேர்கோட்டில் சென்றும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவர். 7வது நாள் தாங்கள் சேகரித்தவைகளை குறிப்பு எடுப்பார்கள்.

இந்த கணக்கெடுக்கும் பணி மொபைலில் தனி ஆப் மூலம் பதியப்படுகிறது. முண்டந்துறை காப்பகத்திற்கு உட்பட்ட 4 வனச்சரகங்களில் 30 இடங்களிலும், களக்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 25 இடங்களிலும் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. புலிகள் எண்ணிக்கையை கண்டறிய வனப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்படும். அதில் பதிவாகும் படங்களை ஆய்வு செய்து புலிகள் மற்றும் வனவிலங்குகளின் எண்ணிக்கை பற்றி தேசிய புலிகள் ஆணையத்தினர் அறிவிப்பார்கள். தற்போது வரை 14 புலிகள் இருப்பதாக அவர்கள் அறிவித்து, ஒவ்வொரு புலிக்கும் ஒவ்வொரு எண் கொடுத்துள்ளனர். இந்தாண்டு மேலும் புலிகளின் படங்கள் பதிவானால் அவைகளுக்கும் எண்கள் கொடுப்பார்கள்.

காப்பகத்தில் ஏராளமான புலிகள் இருக்கலாம். ஆனால் கேமராவில் பதிவாகும் புலிகளை மட்டுமே தேசிய புலிகள் ஆணையத்தினர் கணக்கில் கொள்கிறார்கள். கேமராக்களில் பதிவாகாத புலிகளை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. எனவே நடப்பாண்டில் அதிக புலிகள் படங்களை பதிவு செய்ய கூடுதல் இடங்களில் கேமராக்கள் பொருத்த முடிவு செய்துள்ளோம்.

தற்போது 900 கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் காரையாறு, சேர்வலாறு பகுதிகளுக்கு வனத்துறை வாகனங்களின் மூலம் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவோர் ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்டவற்றை கொண்டு சென்றனர். இந்த ஆண்டு மொபைல் மூலம் கணக்கெடுப்பு பணிக்காக கூடுதலாக பவர் பேங்க், சோலார் மின்சாரம் தயாரிக்கும் கருவி, சோலார் விளக்கு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.

The post களக்காடு, முண்டந்துறை காப்பகத்தில் கணக்கெடுப்பு பணி புலிகள் கணக்கெடுக்க 900 கேமராக்கள் பொருத்தம் appeared first on Dinakaran.

Tags : Kalakkad ,Munduwara Archive ,MARIMUTHU ,WIKEPURAM ,MUNDUARA ,NELLA DISTRICT ,KALAKKADU ,PAPANASAM WEST ,SENNADA ,KADAMAN ,Dinakaran ,
× RELATED களக்காட்டில் வாலிபரின் வீட்டில் ரூ.20 ஆயிரம் திருட்டு