×

கோபி அருகே வீட்டிற்குள் புகுந்த முகமூடி கொள்ளையனை பார்த்து அலறிய பெண் கழுத்து நெரிப்பு

*கேமராவில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்

கோபி : கோபி அருகே வீட்டிற்குள் புகுந்த முகமூடி கொள்ளையனை பார்த்து அலறிய பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற பரபரப்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாவட்டம், கோபி அருகே கடத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கேத்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ் (64). ஆயுள் காப்பீடு நிறுவன முகவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு காஞ்சனா (57) என்ற மனைவியும், ஸ்ரீதர் (35), சுகந்த் (33) என்ற இரு மகன்களும் உள்ளனர். ஸ்ரீதர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்திலும், சுகந்த் அருகில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் செயலாளராகவும் உள்ளனர்.

வழக்கம் போல இரவு வேலை முடிந்த பிறகு கதவுகளை பூட்டிவிட்டு அனைவரும் தூங்க சென்றுள்ளனர். நடராஜன், அவரது மகன்கள் ஆளுக்கொரு அறையில் தூங்கியபோது காஞ்சனா வீட்டின் வரவேற்பறையில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் வீட்டின் காம்பவுண்டுக்குள் முகமூடி அணிந்து உள்ளே புகுந்த கொள்ளையன், வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை வேறுபக்கமாக திருப்பி வைத்துவிட்டு, அங்கு துணிகளை காய வைப்பதற்காக கட்டியிருந்த நைலான் கயிற்றை அறுத்து எடுத்துக்கொண்டு வீட்டின் கதவை திறக்க முயற்சித்துள்ளான். அப்போது கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருக்கவே, கொள்ளையன் கதவு திறக்கும் வரை காத்திருந்துள்ளான்.

இந்நிலையில் நடராஜ், நள்ளிரவில் இயற்கை உபாதைக்காக, கதவின் தாழ்ப்பாளை நீக்கி வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார். நடராஜ் வெளியே சென்ற அந்த ஒரு வினாடி நேரத்தில் வீட்டிற்குள் கொள்ளையன் புகுந்துள்ளான். முகமூடி அணிந்த நிலையில் கையில் நைலான் கயிற்றுடன் கொள்ளையன் வீட்டிற்குள் நுழைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த காஞ்சனா சத்தமிட்டார். ஆத்திரமடைந்த கொள்ளையன் படுத்திருந்த காஞ்சனாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றான். காஞ்சனாவின் சத்தம் கேட்டு அறையில் தூங்கிக்கொண்டு இருந்த சுகந்த் வந்து பார்த்தார்.

அப்போது, மர்ம நபர் தாயின் கழுத்தை நெரித்துக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதற்குள் நடராஜனும் வருவதை அறிந்த கொள்ளையன், வீட்டைவிட்டு வெளியேறி இருட்டில் தப்பியோடினான். இரவு நேரமென்பதால் கொள்ளையனை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து நடராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் கடத்தூர் போலீசார் உடனடியாக நடராஜனின் வீட்டிற்கு சென்று அங்கு பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் கொள்ளையனின் ஒவ்வொரு நடவடிக்கையும் பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய், நடராஜனின் வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள கிணறு வரை சென்றது. காவல்துறையினர் கிணற்றுக்குள் சோதனை செய்தபோது, கொள்ளையன் அணிந்து இருந்த முகமூடி, கத்தி உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து வழக்குப்பதிவு செய்த கடத்தூர் போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post கோபி அருகே வீட்டிற்குள் புகுந்த முகமூடி கொள்ளையனை பார்த்து அலறிய பெண் கழுத்து நெரிப்பு appeared first on Dinakaran.

Tags : Gobi ,Erode district ,Dinakaran ,
× RELATED வாலிபர் தூக்கிட்டு சாவு