×

பிரமோற்சவ முதல் நாள் ரத உற்சவத்தில் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் ‘வள்ளிமலை முருகனுக்கு அரோகரா’ என பக்தி முழக்கம் காட்பாடி அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில்

பொன்னை, பிப். 21 : வள்ளிமலை சுப்பிமணிய சுவாமி கோயிலில் பிரமோற்சவ முதல் நாள் ரத உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வள்ளிமலை முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இங்கு மாசி மாத பிரமோற்சவ ரத உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு கடந்த 14ம் தேதி மலைக்கோயில் வளாகத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்ட கொடி கம்பத்தில் கோயில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடிக்கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து மேஷ லக்கனத்தில் கொடி ஏற்றப்பட்டது. அன்று முதல் நாள்தோரம் பல்வேறு வாகனங்களில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி எழுந்தருளி திருவீதிஉலா நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக நேற்று காலை உற்சவ மூர்த்திகளான வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு மலை குகைக்கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள் செய்து சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மலைக்கோயிலில் இருந்து உற்சவர்களை பக்தர்கள் தோளில் சுமந்து வந்து காலை 10.30 முதல் 11.30 மணிக்குள் ரதம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து நேற்று மாலை 5.30 மணி அளவில் முதல் நாள் தேர் திருவிழா துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ‘வள்ளிமலை முருகனுக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, 6.30 மணி வரை தேர் இழுக்கப்பட்டு சின்னகீசகுப்பம் துண்டுகரை பகுதியில் 1ம் நாள் தேரோட்டம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து இன்னிசைக் கச்சேரி மற்றும் ஆடல் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று காலை 9 மணி அளவில் 2ம் நாள் தேரோட்டம் துவங்க உள்ளது.

The post பிரமோற்சவ முதல் நாள் ரத உற்சவத்தில் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் ‘வள்ளிமலை முருகனுக்கு அரோகரா’ என பக்தி முழக்கம் காட்பாடி அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் appeared first on Dinakaran.

Tags : Pramotsava ,Subramanya Swamy Temple ,Katpadi ,Ponnai ,Ratha Utsavam ,Brahmotsavam ,Vallimalai Subpimaniya Swamy Temple ,Subramanya Swami Temple ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.98 கோடி