×

செல்லாததாக ஆக்கப்பட்ட வாக்குகளை எண்ணிய நீதிபதிகள் சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜ வெற்றி ரத்து: ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: சண்டிகர் மேயர் பதவி விவகாரத்தில் பாஜ வெற்றி பெற்றதாக வெளியான தேர்தல் முடிவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது. பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரான யூனியன் பிரதேசம் சண்டிகரின் மேயர் தேர்தல் இந்த மாதம் முதல் வாரத்தில் நடந்தது. அதில் பாஜ மேயர் வேட்பாளர் மனோஜ் சோங்கர் 16 வாக்குகள் பெற்றதாகவும், ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணியின் மேயர் வேட்பாளர் 12 வாக்குகள் பெற்றதாகவும், எட்டு வாக்குகள் செல்லாது எனவும் தேர்தல் அதிகாரியாக இருந்த பாஜ கவுன்சிலர் அனில் மாஷி அறிவித்தார். அவர் திட்டமிட்டு வாக்குச்சீட்டுகளில் பேனாவால் சில திருத்தம் செய்து அது செல்லாது என அறிவித்ததாக கூறி அதற்கான வீடியோவை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டன. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணியின் மேயர் வேட்பாளர் குல்தீப் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றம், தேர்தல் அதிகாரி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து மேற்கண்ட விவகாரத்தில் குல்தீப் குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தபோது நேரில் ஆஜரான தேர்தல் அதிகாரி அனில் மாஷி வாக்கு சீட்டில் தான் குறியீடு செய்து அடையாளங்களை வைத்தது உண்மை தான் என தனது முறைகேட்டை நீதிபதிகள் முன்னிலையில் பகிரங்கமாக ஒத்துக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணை நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் aமிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முந்தைய உத்தரவின் அடிப்படையில் தேர்தல் அதிகாரி அனில் மாஷி விசாரணைக்கு நேற்றும் நேரில் ஆஜராகி இருந்தார்.

நீதிபதிகள் கூறுகையில், திங்கட்கிழமை நடந்த விசாரணையின் போது செல்லாத வாக்கு சீட்டை அடையாளம் காண்பதற்கு எக்ஸ் குறியீடு போட்டதாக தேர்தல் அதிகாரி அனில் மாஷி தெரிவித்தார். ஆனால் இப்போது வாக்கு சீட்டை நேரடியாக பார்க்கும் போது தான் தெரிகிறது. அதில் பல விவரங்களை வரி வாக்கியமாகவே எழுதியுள்ளார். அதற்கான காரணம் என்ன. மேலும் சிதைக்கப்பட்ட எட்டு வாக்கு சீட்டுகளிலும் ஆம் ஆத்மிக்கு சாதகமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை மட்டும் குறிப்பிட்டு தேர்தல் அதிகாரி உள்நோக்கத்துடன் ஏன் எடுத்து சிதைத்துள்ளார். அதற்கான அரசியல் பின்புலம் என்ன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டால் தேர்தல் அதிகாரியான அனில் மாஷி, சண்டிகர் மேயர் தேர்தலில் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது என தெரிவித்தனர்.

இதையடுத்து மனுதாரர் குல்தீப் குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி,”சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் தேர்தல் அதிகாரி அனில் மாஷி உண்மைக்கு புறம்பாகவும், செய்த தவறை மறைக்கும் விதமாகவும் பொய்யான தகவலை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது தேர்தல் அரசியல் விதிகளுக்கு முரணானதாகும். மேலும் இதில் செல்லாத வாக்கு சீட்டுக்கள் என்று எங்கும் எழுதப்படவில்லை. அதனால் இந்த விவகாரத்தில் நீதிமன்ற விசாரணையை திசை திருப்பும் நோக்கத்தில் செயல்பட்ட தேர்தல் அதிகாரி அனில் மாஷி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டுமில்லாமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உட்பட மற்ற இரு நீதிபதிகளும் ஒருமித்து வழங்கிய தீர்ப்பில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரான குல்தீப் குமார் தாக்கல் செய்துள்ள மனு மீது முகாந்திரம் உள்ளது. அதனை உச்ச நீதிமன்றம் ஏற்கிறது. எனவே இந்த விவகாரத்தில் தேர்தல்களில் ஜனநாயகம் நசுக்கப்படுவதை தடுக்க உச்ச நீதிமன்றத்தின் உச்சபட்ச அதிகாரமான அரசியல் சாசன விதி 142ஐ பயன்படுத்தி நாங்கள் விரிவான தீர்ப்பை வழங்குகிறோம். அதில், சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் நடந்த அனைத்து முறைகேடுகளுக்கும் தேர்தல் அதிகாரி அனில் மாஷியே முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவர் தனது அதிகார வரம்பை முழுவதுமாக மீறியுள்ளார். இது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். எனவே முன்னதாக சட்டவிரோதமாக வெளியிடப்பட்ட சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது. மேலும் அதில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த உத்தரவின் மூலம் ரத்தாகிறது.

இதில் சிதைக்கப்பட்ட எட்டு ஓட்டுக்களையும் சேர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரும், மனுதாரருமான குல்தீப் குமாருக்கு வழங்கி அவரை சண்டிகரின் மேயராக வெற்றி பெற்றதாக அறிவிக்கிறோம். குறிப்பாக ஜனநாயகத்தில் செயல்முறையில் இதுபோன்ற சூழ்ச்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட வேண்டும். அதுவே உச்ச நீதிமன்றத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரியான அனில் மாஷி மீது சம்பந்தப்பட்ட அரசுகள் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் மூன்று வாரங்களில் அவர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறது. அதில், சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்ததற்காக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் சந்திக்கவும், அதேப்போன்று முறைகேடு செய்ததற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என அனில் மாஷி விரிவான முறையில் விளக்கமளிக்க வேண்டும். மேலும் இந்த விவகாரம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இதுதொடர்பான வீடியோ பதிவுகள் அனைத்தையும் மீண்டும் சீலிட்டு பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றத்தில் பதிவாளர் அலுவலகம் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

* இந்தியா கூட்டணியால் பா.ஜவை வீழ்த்த முடியும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உற்சாகம்

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியது: சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றி. இந்த முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்கது. இது இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி. இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இருந்து, வியூகமாக செயல்பட்டால், பாஜவை தோற்கடிக்க முடியும் என்பதே இந்த தீர்ப்பின் செய்தி. சண்டிகர் மேயர் தேர்தலில் 36 வாக்குகளில் 8 வாக்குகளை திருட முடிந்தால், 90 கோடி வாக்குகள் பதிவாகும் வரவிருக்கும் தேர்தலில் பாஜ என்னவெல்லாம் செய்யும்? இந்த கடினமான காலங்களில் ஜனநாயகத்தை காப்பாற்றியதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* தேர்தல் அதிகாரி சிப்பாய் உண்மையான முகம் மோடி ராகுல்காந்தி விளாசல்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், ‘ தேர்தல் அதிகாரி மாஷி ஜனநாயகத்தை கொலை செய்யும் பாஜ சதியில் ஒரு சிப்பாய் மட்டுமே. அவருக்கு பின்னால் மோடியின் முகம் உள்ளது’ என்றார்.

* வீடியோ காட்சி ஒளிபரப்பு

சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, தான் முறைகேட்டில் ஈடுபடவில்லை என்று தேர்தல் அதிகாரி தரப்பில் அனில் மாஷி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு, வாக்கு சீட்டு எண்ணிக்கை நடைபெற்ற அன்றைய தினம் அங்கு நடந்த அனைத்து விவரங்களும் கொண்ட வீடியோவை நீதிமன்ற அறையில் ஒளிபரப்பு செய்தனர். சுமார் அரை மணி நேரம் ஓடிய அதில், தேர்தல் அதிகாரி அனில் மாஷி வாக்கு சீட்டில் குறியீடு வைப்பது, அதனை மறைக்கும் விதமாக கேமராக்களை மீண்டும் மீண்டும் தொடர்ந்து பார்ப்பது, முறைகேட்டை தட்டி கேட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் மற்றும் அக்கட்சி உறுப்பினர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது, இறுதியாக பாஜகவுக்கு ஆதரவாக முடிவுகளை வெளியிட்டது அனைத்தும் திரையிடப்பட்டது. இதனை விசாரணை அறையில் இருந்த நீதிபதிகள், வழக்கறிஞர்களும் பார்த்தனர்.

The post செல்லாததாக ஆக்கப்பட்ட வாக்குகளை எண்ணிய நீதிபதிகள் சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜ வெற்றி ரத்து: ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chandigarh ,mayoral ,Supreme Court ,Aam Aadmi Party ,NEW DELHI ,BJP ,Union Territory of Punjab ,Aryana ,Chandigarh mayoral election ,Dinakaran ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்