×

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த ஜெயலலிதாவின் தங்க நகைகள் மார்ச் 7ல் தமிழ்நாடு திரும்புகிறது: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு.

பெங்களூரு: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் தண்டனை காலம் முடிந்ததை அடுத்து இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட வேண்டும் என பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரினார்.

இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய நிலங்கள் குறித்த விவரங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே அறிக்கையாக தாக்கல் செய்தது. வங்கி கணக்குகளில் உள்ள பண இருப்பு குறித்து தகவல் தெரிவிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அதன் தகவல்கள் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. ஒரே வங்கியில் மட்டும் ரூ.59 லட்சம் இருப்பு இருப்பதாகவும், அதை தமிழக அரசிடம் ஒப்படைத்து இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்திற்கு பதில் அளித்திருந்தது.

இதனிடையே கடந்த மாதம் ஜனவரி 22ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கர்நாடக அரசிடம் உள்ள ஜெயலலிதாவின் தங்க நகைகளை தமிழ்நாடு அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், இதற்காக தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி மோகன் உத்தரவிட்டு இருந்தார். மேலும் கர்நாடக அரசுக்கு வழக்கு செலவு கட்டணமாக ரூ.5 கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த வழக்கை பிப்ரவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். அதன்படி இந்த வழக்கு மீண்டும் நீதிபதி மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு வசம் உள்ள ஜெயலலிதாவின் பொருட்களை வருகிற மார்ச் மாதம் 6, 7ம் தேதிகளில் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார். ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைர நகைகள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை 2014ம் ஆண்டு நீதிபதி குன்ஹா உத்தரவின் பெயரில் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு அனைத்து ஆபரணங்களும் முதல் முறையாக கொண்டு வரப்பட்டது. இவை அனைத்தும் ஐந்து டிரங் பெட்டிகளில் கொண்டுவரப்பட்டது.

இந்த ஐந்து டிரங் பெட்டிகளும் தற்பொழுது வரை விதான சவுதா சட்டமன்ற வளாகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் நகைகளை ஒப்படைக்கும் நாளில் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கர்நாடக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு கட்டணம் ரூ.5 கோடியை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை, அதையும் தமிழ்நாடு அரசு கர்நாடகாவிற்கு செலுத்த வேண்டும் என்று நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.

The post சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த ஜெயலலிதாவின் தங்க நகைகள் மார்ச் 7ல் தமிழ்நாடு திரும்புகிறது: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு. appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,Tamil Nadu ,Bengaluru Court ,Bengaluru ,Narasimhamurthy ,Dinakaran ,
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...