×

டெல்லி நோக்கி விவசாயிகள் இன்று பேரணி

சண்டிகர்: வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக பஞ்சாப், அரியானா மாநில எல்லையில் 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் கடந்த ஒருவாரமாக குவிந்துள்ளனர். கடந்த 3 நாட்களாக பொறுத்திருந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டாததால் மீண்டும் இன்று டெல்லி நோக்கி பேரணி செல்வதாக அறிவித்துள்ளனர். இதனால் டெல்லி எல்லையில் மீண்டும் பதற்றம் தொற்றி உள்ளது. ஏற்கனவே அங்கு கான்கிரீட் தடுப்புகள், இரும்பு முள்வேலிகள் அமைத்து போலீசார் பலமான தடுப்பு அரண்களை அமைத்துள்ளனர்.

இதற்கிடையே, பஞ்சாப், அரியானா இடையேயான ஷம்பு எல்லையில் நேற்று கிசான் மஸ்தூர் மோர்ச்சா சங்கத்தை சேர்ந்த சர்வன் சிங் பாந்தேர் அளித்த பேட்டியில், ‘‘குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டத்தை கொண்டு வர பிரதமர் மோடிக்கு விருப்பமிருந்தால் நாடாளுமன்ற ஒருநாள் சிறப்பு கூட்டத்தை கூட்டி சட்டத்தை கொண்டு வரலாம். அரசு சட்டம் கொண்டு வந்தால் வாக்களிக்க தயார் என அனைத்து எதிர்க்கட்சிகளும் அவர்களின்நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளன. அதே போல, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரை அமல்படுத்துவது, ரூ.18.5 லட்சம் கோடி வேளாண் கடனை ரத்து செய்யும் அறிவிப்பையும் பிரதமர் மோடி வெளியிட வேண்டும்’’ என்றார்.

The post டெல்லி நோக்கி விவசாயிகள் இன்று பேரணி appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chandigarh ,Punjab ,Aryana ,MS Swaminathan Commission ,Dinakaran ,
× RELATED பஞ்சாப் காங். மாஜி தலைவர் அகாலி தளத்தில் இணைந்தார்