×

சாலைகளில் ஆணியை புதைக்கிறது பாஜ அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது திமுக அரசு: வேளாண் பட்ஜெட் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: திமுக அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: வேளாண் நிதிநிலை அறிக்கை இயற்கை வளத்தை மேம்படுத்திக் காட்டும் ஈடு இணையற்ற அறிக்கையாக அமைந்துள்ளது. மண் வளம் பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கவும் உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செயல்முறைகளையும் ஊக்கப்படுத்திட ‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்’ அமைந்துள்ளது. ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணியிர்களின் எண்ணிக்கை குறைந்து மண் வளம் குறைந்து வருகிறது. எனவே மண் வளத்தை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. ரசாயன உரங்களைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெற்பயிரில் ரசாயன மருந்துகளைக் குறைத்தலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2400-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளை உயர்த்தப் போகிறது. மரபுசார் நெல் ரகங்களை ஊக்குவிக்கப் போகிறோம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிவன் சம்பா நெல் ரகம் அதிகம் பயிரிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களின் வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. வேளாண் இயந்திரங்கள் வாடகைக்குக் கிடைக்கும் மையங்களை உருவாக்க இருக்கிறோம்.

இயற்கைச் சீற்றங்களால் உழவர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பில் இருந்து அவர்களை மீட்கப் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்தத் திட்டத்துக்கு மட்டும் ரூ.1,775 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ‘ஒரு கிராமம் ஒரு பயிர்’ என்ற திட்டம் 15,280 கிராமங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த ஆண்டில் மேலும் 50,000 பேருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க இருக்கிறோம். நெல்லுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

தொழில் துறை சார்பில் நடைபெறுவதை போல வேளாண்மைத் துறை சார்பில் கண்காட்சி, திருவிழா, சங்கமம் போன்றவற்றை நடத்தி வேளாண்மை மீதான ஆர்வத்தைத் அரசு தொடர்ந்து உருவாக்கி வருகிறது. மண் வளத்தில் இருந்து மக்கள் நலம் வரைக்கும் கவனித்து இந்த நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து வழங்கியுள்ள வேளாண் மற்றும் உழவர் நலன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை பாராட்டுகிறேன். துறையின் செயலாளர் அபூர்வாவுக்கும், துறை சார்ந்த மற்ற அதிகாரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டு.

3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, உழவர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒன்றிய பாஜ அரசு. ஒன்றரை ஆண்டுகள் தலைநகர் டெல்லியில் தங்கிப் போராடினார்கள் உழவர்கள். அவர்களது எதிர்ப்பினால் பின்வாங்கியது பாஜ அரசு. இப்போது மீண்டும் டெல்லியில் உழவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அவர்கள் மீது இரக்கமற்ற வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பசிப்பிணி போக்கும் மருத்துவர்களாம் வேளாண் பெருமக்களது கோரிக்கைகளுக்குச் செவிமடுக்கக்கூட மனமில்லாத வகையில் ஒன்றிய அரசு உள்ளது.

உழவர்களைத் தடுக்கச் சாலைகளில் ஆணியைப் புதைக்கும் அரசாக பாஜக அரசு உள்ளது. அதேநேரத்தில் உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டி வழங்கும் அரசாகத் தி.மு.க. அரசு உள்ளது. இதன் மூலமாக உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறோம் என்பதை அனைவரும் அறியலாம். மண்ணையும் காப்போம், மக்களையும் காப்போம், மண்ணையும் வளர்த்து, மக்களையும் வாழ்விப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சாலைகளில் ஆணியை புதைக்கிறது பாஜ அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது திமுக அரசு: வேளாண் பட்ஜெட் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : BJP ,DMK govt ,Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,DMK government ,
× RELATED சொல்லிட்டாங்க…