×

பிரதமர் மோடி வரும் 27,28ல் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில்

* குலசேகரன்பட்டினம் புதிய ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார் புதிய பாம்பன் தூக்கு பாலத்தை திறக்கிறார் பல்லடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்

நாடளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ்நாட்டுக்கு கடந்த மாதம் 2 முறை பிரதமர் மோடி வந்தார். 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வரும் 27ம் தேதி கேரளா மற்றும் தமிழ்நாட்டுக்கு வருகிறார். 27ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் அண்ணாமலையின் நடைபயண நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் 28ம் தேதி (புதன்கிழமை) ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வருகிறார். அங்கு புதிய துறைமுகம் பள்ளி அருகே நடக்கும் நிகழ்சிகளில் கலந்து கொள்கிறார். அதில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட உள்ள புதிய ராக்கெட் ஏவுதளத்துக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். இதேபோல் ரூ.550 ேகாடி மதிப்பீட்டில் ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில்வே தூக்கு மேம்பாலத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணிக்கிறார். இதுதவிர தூத்துக்குடி வெளித்துறைமுக விரிவாக்கம் உள்ளிட்ட சில திட்டங்களையும் அவர் துவக்கி வைக்கிறார். பின்னர் அதே ஹெலிகாப்டரில் அங்கிருந்து திருவனந்தபுரம் புறப்பட்டு செல்லும் அவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி பழைய தெர்மல்நகர் காவல் நிலையம் அருகே ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல் தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வங்காள விரிகுடா, மன்னார்வளைகுடா, இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடலோர காவல்படை கப்பல்கள் மண்டபம் தொடங்கி கொச்சி வரையிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. கடலோர காவல்படை ரோந்து கப்பல்கள், டார்னியர் ரக விமானங்கள் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளன. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மரைன் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், பாம்பனில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தை ரயில்வே வாரிய தலைவரும், முதன்மை நிர்வாக அதிகாரியுமான ஜெயா வர்மா சின்ஹா நேற்று ஆய்வு செய்து பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட்டார். பிரதமர் வருகையை முன்னிட்டு டெல்லியில் இருந்து பிரதமரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிகள், எஸ்பிஜி அதிகாரிகள் பலரும் வந்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்யவுள்ளனர்.

The post பிரதமர் மோடி வரும் 27,28ல் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,Kulasekaranpattinam ,Pampan ,Palladam ,Dinakaran ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...