×

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த வாலிபரை சரமாரி பூட்ஸ் காலால் எட்டி உதைக்கும் வீடியோ வைரல்: போலீஸ்காரர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

அண்ணாநகர்: ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த வாலிபரை பூட்ஸ் காலால் எட்டிஉதைத்த உதவி ஆய்வாளர், 2 போலீஸ்காரர்கள் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சென்னை கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆய்வாளர் சக்திவேல், காவலர்கள் தினேஷ், அருள் ஆகியோர் கோயம்பேடு மெட்டுக்குளம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் மற்றும் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டிவருகின்றவர்களை பிடித்து அபராதம் விதித்ததுடன் வழக்குபதிவு செய்தனர்.

மதுபோதையில் பைக்கில் வந்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ஹேமநாத்(27) பிடித்து வழக்குபதிவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஹேமநாத், போக்குவரத்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த உதவி ஆய்வாளர் சக்திவேல், போலீஸ்காரர்கள் தினேஷ், அருள் ஆகியோர் ஹேமநாத்தை தாக்கியதுடன் பூட்ஸ் காலால் சரமாரியாக எட்டி உதைத்துள்ளனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோயம்பேடு சட்டம், ஒழுங்கு போலீசார் வந்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் நடராஜனை சமாதானப்படுத்தினர். இதன்பின்னர் போலீசார் தாக்குதலில் படுகாயம் அடைந்த ஹேம்நாத்தை மீட்டு அவரது பெற்றோரை வரவழைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மூக்கு, தாடையில் பலத்த காயம் அடைந்துள்ள அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த தாக்குதல் வீடியோ சமூகவலைதள பக்கத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ தொடர்பாக வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையர் தேவராணி விசாரணை நடத்தினார். இதில், போலீசார் தாக்குதல் நடத்தும் வீடியோ உண்மை என்பது தெரியவந்துள்ளதால் உதவி ஆய்வாளர் சக்திவேல், போலீஸ்காரர்கள் தினேஷ், அருள் ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது;
கோயம்பேட்டில் காய்கறிகள், பழங்கள், பூ மற்றும் உணவு தானிய மார்க்கெட்டுக்கள் செயல்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டம், சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து பொருட்களை வாங்குவதற்காக சில்லறை வியாபாரிகள் வருகின்றனர். பூக்களை வாங்குவதற்கு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சில்லறை வியாபாரிகள் பைக்கில் வந்து செல்கின்றனர். கோயம்பேடு மார்க்கெட் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வருபவர்கள், மதுபோதையில் வருபவர்களை பிடித்து அபராதம் வசூலிக்கின்றனர்.

ஆனால் கோயம்பேடு காவல் நிலையத்தில் இருந்து சட்டம், ஒழுங்கு போலீசார் ஹெல்மெட் அணியாமல் வந்தால் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வது கிடையாது. போலீஸ் ரோந்து வாகனங்களில் செல்லும் போலீசார் சீட் பெல்ட் அணிவது இல்லை. இதனையும் போக்குவரத்து போலீசார் கண்டும் காணாதது போல் இருந்துவிடுகின்றனர்.

நேற்றுமுன்தினம் கோயம்பேட்டில் போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டியை பூட்ஸ் காலால் சரமாரியாக தாக்கும் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். எதற்காக போலீசார் இச்செயலில் ஈடுபட்டனர் என்று தெரியவில்லை. மதுபோதையில் பைக் ஓட்டிவந்தால் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதே விட்டுவிட்டு தாக்குதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டது சரியல்ல. இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த வாலிபரை சரமாரி பூட்ஸ் காலால் எட்டி உதைக்கும் வீடியோ வைரல்: போலீஸ்காரர்கள் 3 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Chennai Koyambedu ,Assistant Traffic Inspector ,Sakthivel ,Dinesh ,Arul ,Koyambedu Mettukulam ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெளிமாநில...