×
Saravana Stores

அண்ணாமலை நிகழ்ச்சிக்காக நடைபாதை, கடைகளை மறைத்தபடி பிளக்ஸ் பேனர்; வியாபாரிகள் பாதிப்பு

தாம்பரம்: பல்லாவரத்தில் அண்ணாமலை நிகழ்ச்சிக்காக நடைபாதை, கடைகளை மறைத்தபடி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்ததால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பாஜக சார்பில் பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் “என் மண் என் மக்கள்” என்ற யாத்திரை நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை காலை 10 மணிக்கு வருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பாஜக தொண்டர்கள் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் 45 நிமிடம் தாமதமாக அண்ணாமலை நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்தார். இதனால் கடுப்பான தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர்.

இதுபோல் அண்ணாமலை நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் சாலையின் இருபுறமும் உள்ள கடைகளை மறைத்தபடி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதனால் வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிப்புக்குள்ளாகினர். குரோம்பேட்டை பேருந்து நிலையம் முதல் பல்லாவரம் பகுதி வரை சாலையோரங்களில் பிளக்ஸ் பேனர்கள், பாஜ கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்ததால் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் குறைந்த எண்ணிக்கையில் கட்சியினர் இருந்ததால் சிறிது நேரம் பேசிவிட்டு அண்ணாமலை காரில் புறப்பட்டு சென்றார்.

The post அண்ணாமலை நிகழ்ச்சிக்காக நடைபாதை, கடைகளை மறைத்தபடி பிளக்ஸ் பேனர்; வியாபாரிகள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Thambaram ,Pallavaram ,BJP ,Dinakaran ,
× RELATED மந்த கதியில் நடைபெற்று வரும்...