×

குற்றம் சொல்வதற்காக ஒரு கட்சியின் மாநில தலைவராக இருக்கிறார்: அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்

சென்னை: குற்றம் சொல்வதற்காகவே இன்றைக்கு ஒரு கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை இருக்கின்றார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (20.02.2024) ஆணையர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் துரைசாமி ராஜு, க.ரவிச்சந்திர பாபு மற்றும் ஆர். மாலா ஆகியோர் முன்னிலையில் 8 திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 130 கிலோ 393 கிராம் எடையுள்ள பலமாற்று பொன் இனங்களை மும்பையிலுள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொது மேலாளரிடம் ரவிரஞ்ஜன் அவர்களிடம் ஒப்படைத்தார்.

பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பயன்பாட்டிற்கு இயலாத பொன்னினங்களை உருக்கி வங்கியில் முதலீடு செய்து அதன்மூலம் பெறப்படுகின்ற வட்டி தொகையை அந்தந்த திருக்கோயிலுக்கு அடிப்படை தேவைகள் மற்றும் திருப்பணிகளுக்கு செலவிடப்பட்டு வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல திருக்கோயில்களில் நூற்றுக்கணக்கான கிலோ கிராம் எடையுள்ள பலமாற்று பொன்னினங்கள் பயன்படுத்த இயலாமல் கிடப்பதை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை கொண்டு சென்றவுடன்,

கலைஞர் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த உத்தரவிட்டதற்கிணங்க ஏற்கனவே பெரியபாளையம், இருக்கன்குடி, திருவேற்காடு, மாங்காடு, திருச்செந்தூர் ஆகிய ஐந்து திருக்கோயிலிலிருந்து பலமாற்று பொன்னினங்கள் மும்பையில் இருக்கின்ற ஒன்றிய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கப்பட்டு 344 கிலோ 334 கிராம் எடை கொண்ட சுத்தத் தங்கம் கிடைக்கப் பெற்றவுடன் அதனை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததில் வட்டியாக ஆண்டிற்கு ரூ.4.31 கோடி தற்போது கிடைக்கின்றது. இந்த வருவாயை அந்தந்த திருக்கோயில்களி திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

இன்றைய தினம் திருத்தணி, சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மேல்மலையனூர், அங்காளம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம், முத்துமாரியம்மன் திருக்கோயில், சிவகங்கை, சமஸ்தானம் தேவஸ்தானம், இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லானி, ஆதிஜெகன்னாத பெருமாள் திருக்கோயில், நைனார்கோவில், நாகநாதசுவாமி திருக்கோயில், சேலம், சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில், திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் என 8 திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 130 கிலோ 393 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்கள் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன்மூலம் சுமார் ரூ.1.5 கோடி வட்டித்தொகையாக கிடைக்கும்.

மேலும், பெரியபாளையத்தில் ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டது போக தற்போது சேர்ந்திருக்கின்ற 13 கிலோ எடை உள்ள பொன்னினங்கள் அந்த திருக்கோயிலின் தங்கத்தேர் செய்வதற்கு பயன்படுத்தப்பட உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மடப்புரம், தேக்கம்பட்டி மற்றும் குணசீலம் ஆகிய 3 திருக்கோயில்களில் 46 கிலோ 237 கிராம் எடையுள்ள பலமாற்று பொன்னினங்கள் பிரித்தெடுக்கப்பட்டிருக்கின்றது. அதை விரைவில் மும்பை உருக்காலைக்கு அனுப்பப்படும். இந்த திட்டம் முழுமையாக நிறைவுறுகின்ற போது திருக்கோயில்களுக்கு ஆண்டிற்கு 25 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருக்கோயில்களில் உள்ள பலமாற்று பொன் இனங்களை பிரித்தெடுப்பதற்காக தமிழ்நாட்டினை 3 மண்டலங்களாக பிரித்து ஓய்வு பெற்ற மாண்பமை உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் துரைசாமி ராஜு, க.ரவிச்சந்திர பாபு மற்றும் ஆர். மாலா ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இப்பணிகள் குறித்து பொது அறிவிப்பு தரப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் முழுவதுமாக வீடியோ பதிவு செய்து எந்த விதமான குற்றச்சாட்டிற்கும் ஆளாகாத வண்ணம் நடைபெற்று வருகின்றது. இந்த பணி குறித்து தொடக்க காலத்தில் பல்வேறு விமர்சனங்கள் இந்த ஆட்சியின் மீது சுமத்தப்பட்ட போதிலும், அத்தகைய தடைகளை உடைத்தெறிந்து இன்றைக்கு திருக்கோயில்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் ஆண்டுதோறும் கிடைப்பதற்கு வழிவகை செய்து, விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் தடைக்கற்கள் பல உண்டு என்றால் அதை தகர்த்தெறிகின்ற திறன் தோள்கள் திராவிட மாடல் அரசுக்கு உண்டு என்பதை நிரூபித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ரோப் கார் அமைக்கின்ற பணிகளில் தமிழ்நாட்டில் இரண்டு மூன்று நிறுவனங்கள் தான் ஒட்டுமொத்தமாக இருக்கின்றன. ஆகவே ரோப்கார்களை நேர்த்தியாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற வகையிலும் அமைப்பதற்கு நேர்த்தியான நிறுவனங்களை கவனத்துடன் தேர்வு செய்திட ஏற்கனவே தொடங்கி விட்டன. திருநீர்மலை மற்றும் திருக்கழுக்குன்றம் திருக்கோயில்களுக்கு ரோப்கார் அமைக்க ஒப்பந்தம் இறுதி செய்வதற்கு குறைந்தபட்சம் 6 மாத காலமாவது பிடிக்கும். மேலும், இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு அறிவிக்கப்பட்ட பழனி – இடும்பன் மலை, அனுவாவி, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் ரோப்கார் அமைக்கின்ற ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஆட்சியில் முடிவடையாத நிலையில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் சோளிங்கர் திருக்கோயில் ரோப்கார் வசதி திறந்து வைக்கப்பட்டது.

அதில் 50 சதவீத பணிகள் கூட நிறைவடையாத நிலையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு அந்த மாவட்ட அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் உபயதாரர்களை திரட்டி சுமார் ரூ.12 கோடி செலவில் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவு செய்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்படும். மேலும், கரூர் மாவட்டம், அய்யர்மலை ரோப் கார் பணிகளும் விரைவுப்படுத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லை என்பார்கள். குற்றம் சொல்வதற்காகவே இன்றைக்கு ஒரு கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை இருக்கின்றார். இந்திய அளவில் முன்னெடுக்கப்படுகின்ற திருக்கோயில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், நிறைவேற்றுகின்ற ஆட்சிக்கு மதிப்பெண்கள் போட வேண்டும் என்றால் முதலமைச்சர் தலைமையில் செயல்படுகின்ற திராவிட மாடல் ஆட்சிக்கு தான் முதலிடம் தர முடியும்.

ஏனென்றால் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 1,396 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளதோடு, சுமார் ரூ.5,718 கோடி மதிப்பிலான 6,310.92 ஏக்கர் திருக்கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டும், சுமார் 8,251 திருக்கோயில்களுக்கு மாநில வல்லுநர் குழுவால் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டும் இருக்கின்றது. இப்படி எல்லா நிலையிலும் அனைத்து பணிகளும், இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மேலும், இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் எந்த ஆட்சியிலும் மேற்கொள்ளப்படாத வகையில் திருத்தேர்களை செப்பனிடுதல், புதிய திருத்தேர்கள் உருவாக்குதல், திருக்குளங்களை புனரமைத்தல், பசுமடங்களை மேம்படுத்துதல் ப போன்ற அரும்பெரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்து திருக்கோயில்களை வைத்து அரசியல் செய்யலாம் என்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கின்றது.

இனத்தால், மொழியால், மதத்தால் மக்களை பிளவுபடுத்தலாம் என்று நினைப்பவர்களின் ஆசை நப்பாசையாக மாறிவிட்டதால் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை அவரிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. இதை விட அதிகமான குற்றச்சாட்டுகள் கூட ஒரு காலத்தில் அவர்கள் கூறுவார்கள். அவர்கள் ஏமாற்றத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் இருப்பதால் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. முன்னோர்களால் உருவாக்கப்பட்ட பொக்கிஷங்களான ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாக்கும் பணிகளே எங்கள் பணிகளாகும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இருகரங்களால் அரவணைத்து, இந்து சமய அறநிலையத்துறையின் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி தருவதால் ஆன்மிகப் பெரியோர்களுக்கும், இறையன்பர்களுக்கும் மகிழ்ச்சி தருகின்ற திட்டங்களை தொடர்ந்து கொண்டு வருவோம்.

ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் சொத்துக்களை பொது ஏலத்தில் வணிகப் பயன்பாட்டிற்கும், இதர பயன்பாட்டிற்கும் விட்டதின் பலனாக எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு சுமார் 600 கோடி வருமானம் கிடைத்திருக்கின்றது. இந்து சமய அறநிலையத்துறை சட்ட, திட்டத்திற்குட்பட்டு பொது ஏலம் மூலம் வரும் ஆண்டுகளில் துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதற்கு உண்டான வழி வகைகளை மேற்கொள்வோம். இந்து சமய அறநிலையத்துறை பொறுத்த அளவில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் 2 திருக்கோயில்களின் இருந்த முழு நேர அன்னதானத் திட்டத்தை கூடுதலாக 9 திருக்கோயில்களுக்கும், 746 திருக்கோயில்களில் இருந்த ஒருவேளை அன்னதான திட்டத்தை 17 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்தி, 763 திருக்கோயில்களுக்கும் செயல்படுத்தி உள்ளோம்.

திருக்கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதத்தின் தரத்தினை உறுதி செய்து ஒன்றிய அரசின் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் BHOG சான்றிதழ்களை இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. மேலும், துறையின் சார்பில் தனியார் உணவு பாதுகாப்பு நிறுவனம் மூலம் திருக்கோயில்களில் ஆண்டிற்கு மூன்று முறை ஆய்வு செய்து, தரத்தை உறுதி செய்து வருகிறோம். திருவொற்றியூர் திருக்கோயிலில் புளியோதரை கெட்டுப்போன விவகாரம் எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட அலுவலரை உடனடியாக விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறோம். தவறு இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அந்த பிரசாத கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, நல்ல தரமான உணவு தயாரிக்கும் புதிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

சிறு குறைகள் இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உடனடியாக துறையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டவுடன் அதன் மீது நடவடிக்கை எடுக்கின்ற பணியை இந்து சமய அறநிலைத்துறை பாரபட்சமின்றி மேற்கொள்ளும். வெளிநாட்டில் இருக்கும் சிலைகள் மீட்கின்ற பணி தொடர்ந்து அந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மீட்கப்பட்ட சிலைகள், அடையாளம் காணப்பட்ட சிலைகள், சிலைகள் களவு போவதை தடுப்பது குறித்து காவல்துறையுடன் இணைந்து ஒரு கலந்தாய்வு கூட்டத்திற்கு துறை ஏற்பாடு செய்து வருகிறது. சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவுற்றபின் இக்கூட்டம் நடத்தப்படும். தற்குண்டான கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன மேலும் இந்த பணிகளை விரைவுப்படுத்துவதற்கு திட்ட மிட்டு இருக்கின்றோம்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள், அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர்கள், இணை ஆணையர்கள் ச.இலட்சுமணன், பொ.ஜெயராமன், கோ.செ.மங்கையர்க்கரசி மற்றும் அலுவலர்கள் இணை ஆணையர்கள் ச.இலட்சுமணன், பொ.ஜெயராமன், கோ.செ.மங்கையர்க்கரசி மற்றும் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

The post குற்றம் சொல்வதற்காக ஒரு கட்சியின் மாநில தலைவராக இருக்கிறார்: அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekharbhabu ,Annamalai ,Chennai ,Chief Minister ,Mu. K. ,Stalin ,B. K. ,Supreme Court ,High Court ,Commissioner's Office ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...