×

மது போதையில் கிணற்றில் விழுந்த வாலிபர்: 18 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு

திருப்பூர்: மது போதையில் 65 அடி ஆழ கிணற்றில் விழுந்து பலத்த காயத்துடன் விஷ நாகங்களுக்கிடையே 18 மணி நேரம் உயிருக்கு போராடிய நபரை திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினர் மீட்டனர். மதுரையை சேர்ந்த ரஞ்சித் 47 என்பவர் திருப்பூர் அருகே உள்ள மானூர் பகுதியில் கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்துள்ளார். இவர் நேற்று இரவு மது போதையில் வெளியே சுற்றித் திரிந்த போது எதிர்பாராத விதமாக தடுப்புச்சுவர் இல்லாத தரை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

கிணற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் உள்ளே விழுந்த அவரின் இடது கை முறிந்து கழுத்து, முகம் என பல்வேறு பகுதிகளில் பலத்த காயத்துடன் அசைய முடியாமல் அலறி துடித்துள்ளார். அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் இரவு முழுவதும் அங்கேயே உதவிக்கு யாரும் இன்றி தவித்துள்ளார். இன்று பிற்பகல் அந்த வழியாக சென்ற நபர்கள் கிணற்றில் இருந்து முனகல் சப்தம் கேட்பதை அறிந்து உள்ளே பார்த்த போது ரஞ்சித் படுகாயத்துடன் விழுந்து கிடப்பதை கண்டுள்ளனர்.

அவரை காப்பாற்ற முயன்ற போது உள்ளே விஷ நாகங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி ரஞ்சித்தை மீட்டனர். மேலும் முதலுதவி சிகிச்சை செய்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடுமையாக போராடி விஷ நாகங்களுக்கு இடையே சிக்கி இருந்த நபரை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

The post மது போதையில் கிணற்றில் விழுந்த வாலிபர்: 18 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur South Fire Department ,Ranjith ,Madurai ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...