×

குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு இலவசமாக பால் வழங்கும் புதிய திட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு

திருவண்ணாமலை, பிப்.20: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு பால் வழங்கும் திட்டத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ பிரியதர்ஷினி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், பட்டா மாற்றம், சுய தொழில் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 378 பேர் மனு அளித்தனர். அதன்மீது, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்னிலையில் கலெக்டர் விசாரணை நடத்தினார்.

தகுதியுள்ள மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டால், அதற்கான காரணங்களை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்றார். இந்நிலையில், கட்டணமின்றி மனுக்கள் எழுதிதரும் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு என தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தி வரும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில குழந்தையுடன் மனு அளிக்க வரும் தாய்மார்களுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி, கலெக்டர் அலுவலகத்திற்கு குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு, மகளிர் திட்டம் சார்பில் பால் வழங்கும் திட்டத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். அதையொட்டி, கலெக்டர் அலுவலக்தின் தரைதளத்தில் தாய்மார்கள் அமர உரிய இருக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்நிலையில், திருவண்ணாமலை உழவர் சந்தையில் காய்கறிகளை வியாபாரம் செய்வோர், சாலையோர நடைபாதை காய்கறி கடைகளால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக மனு அளித்தனர். சாலையோரங்களில் காய்கறி கடை நடத்துவோர் எண்ணிக்கை திருவண்ணாமலையில் பெருகிவிட்டதால், உழவர் சந்தைக்கு பொதுமக்களின் வருகை குறைந்துவிட்டதாக தெரிவித்தனர். எனவே, சாலையோர காய்கறி கடைகளை கட்டுப்படுத்த வேண்டும், மீண்டும் உழவர் சந்தைக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர். அதேபோல், ஆரணி அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர், அதே கிராமத்தில் போலி நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி செய்தவர்களிடம் இருந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் என மனு அளித்தனர்.

மாதந்தோறும் ₹500 முதல் ₹5000 வரை சேமிப்பு தொகை செலுத்தினால், இருமடங்காக தரப்படும் என தெரிவித்ததால், அந்த பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பணத்தை செலுத்தி ஏமாந்திருப்பதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் பகுதியில், கட்டணமின்றி மனுக்களை எழுதி தரும் பணியில் அரசு அலுவலர்கள் ஈடுபட்டனர். அவர்களிடம், பொதுமக்கள் ஆர்வமுடன் மனுக்களை எழுதிச் சென்றனர். மேலும், கலெக்டர் அலுவலகத்தில் திடீரென தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தவிர்க்க, கூடுதல் போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டிருந்தது.

The post குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு இலவசமாக பால் வழங்கும் புதிய திட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு appeared first on Dinakaran.

Tags : Collector Bhaskara Pandian ,People's Grievance Meeting ,Tiruvannamalai ,Thiruvannamalai Collector ,Thiruvannamalai Collector's Office ,
× RELATED திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு...