×

உருட்டுக்கட்டையால் பொதுமக்களை தாக்கிய சைக்கோ ஆசாமி பிடிபட்டார்: மனநல காப்பகத்தில் ஒப்படைப்பு

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் பகுதியில் உருட்டுக்கட்டையால் பொதுமக்களை தாக்கிய சைக்கோ ஆசாமியை பிடித்த போலீசார், அவரை மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர். சென்னை ராஜிவ்காந்தி சாலையில் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து செல்பவர்களை குறி வைத்து 50 வயது மதிக்கத்தக்க சைக்கோ ஆசாமி உருட்டுக்கட்டையால் தாக்கும் சம்பவம் துரைப்பாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு, துரைப்பாக்கம் 200 அடி சாலையில் தனது தோழிகளுடன் நடந்து சென்ற ஸ்வேதா (25) என்ற இளம்பெண்ணை அந்த சைக்கோ ஆசாமி உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் ஸ்வேதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட அவர் அலறியடித்துக் கொண்டு ஓடினார்.

இதுகுறித்து, அவரது தோழிகள் துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சைக்கோ ஆசாமியிடமிருந்து உருட்டுக்கட்டையை பிடுங்கி அங்கிருந்து விரட்டினர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செம்மஞ்சேரியைச் சேர்ந்த குமரன் (40) என்பவர் துரைப்பாக்கத்தில் இருந்து நீலாங்கரை செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது அதே சைக்கோ ஆசாமி, உருட்டுக்கட்டையால் குமரனை தாக்க முயற்சித்தார். இதில் உஷாரான குமரன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். சில நாட்களாகவே அந்த சைக்கோ ஆசாமியை பார்த்து அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர்.

இந்த செய்தி தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து நேற்று தரமணி சரக உதவி கமிஷனர் பாஸ்கர், துரைப்பாக்கம் சட்டம் -ஒழுங்கு ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு சுற்றித் திரிந்த ஆசாமியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்பதும், தற்போது பெருங்குடி, மணிக்கொடி சீனிவாசன் நகர், 4வது தெருவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருக்கும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அயனாவரத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

The post உருட்டுக்கட்டையால் பொதுமக்களை தாக்கிய சைக்கோ ஆசாமி பிடிபட்டார்: மனநல காப்பகத்தில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Durai Pakkam ,Rajiv Gandhi Road ,Chennai ,
× RELATED கணவர் மாயம், கடன் தொல்லையால் விரக்தி...