×

வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் கண்ணியமாக நடக்க வேண்டும்: இணை ஆணையர் அறிவுறுத்தல்

தண்டையார்பேட்டை: வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று வடக்கு மண்டல இணை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை வடக்கு மண்டலம் பூக்கடை, வண்ணாரப்பேட்டை ஆகிய சரகத்திற்கு உட்பட்ட போக்குவரத்து பணியில் ஈடுபடும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையர் தேவராணி தலைமையில் தீவுத்திடலில் நேற்று மாலை நடந்தது. இதில் பூக்கடை போக்குவரத்து உதவி ஆணையர் சம்பத் பாலா மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இணை ஆணையர் தேவராணி பேசுகையில், ‘போக்குவரத்து பணியில் ஈடுபடும்போது காவலர்கள் எவ்வாறு பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும், பணியின்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது, வாகன ஓட்டிகள் விதியை மீறி செயல்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டும், காரில் வருபவர்கள் சீட் பெல்ட்டும் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று கூற வேண்டும், வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், கண்ணியத்துடனும் போக்குவரத்து காவலர்கள் நடந்து கொள்ள வேண்டும்’’ என்று அறிவுரை வழங்கினார். மேலும் போக்குவரத்து காவலர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இந்த ஆலோசனையில் பூக்கடை, வண்ணாரப்பேட்டை சரகத்திற்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.

The post வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் கண்ணியமாக நடக்க வேண்டும்: இணை ஆணையர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,North Zone ,Commissioner ,Dinakaran ,
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு