×

கும்பாபிஷேகத்திற்கு அமைக்கப்பட்ட யாகசாலையை சேதப்படுத்திய மர்மநபர்கள்

அருப்புக்கோட்டை, பிப்.20: அருப்புக்கோட்டையில் கோயில் கும்பாபிஷேகத்திற்காக அமைக்கப்பட்ட யாகசாலைகளை நள்ளிரவில் மர்மநபர்கள் இடித்து அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அருப்புக்கோட்டையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது தாதன்குளம் விநாயகர் கோயில். 100 ஆண்டு பழமையான இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வரும் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை இன்று துவங்குகிறது. இதற்காக கோயிலில் யாகசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் யாகசாலைகளை இடித்து அகற்றியுள்ளனர். நேற்று காலை இதைப்பார்த்த பக்தர்கள் கொதிப்படைந்தனர். இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் ராமதிலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கும்பாபிஷேகம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஒருதரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின் அவர்களாகவே வழக்கை திரும்ப பெற்றனர். அர்ச்சகர்களுக்கும் போட்டி நிலவியது. இப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து யார் உடைத்தார்கள் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்படும் என்றார்.

The post கும்பாபிஷேகத்திற்கு அமைக்கப்பட்ட யாகசாலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் appeared first on Dinakaran.

Tags : Kumbabhishekam ,Aruppukkottai ,Dadankulam Vinayagar Temple ,Department of Hindu Religious Charities ,Arupukottai ,
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...