×

நத்தம் அருகே பரபரப்பு கிணற்றில் தவறி விழுந்த காட்டு மாடுகள்: ஒருமாடு உயிரிழப்பு; மற்றொரு மாடு மீட்பு

 

நத்தம், பிப். 20: நத்தம் அருகே கிணற்றில் இரண்டு காட்டுமாடுகள் தவறிவிழுந்ததில் ஒரு மாடு பரிதாபமாக உயிரிழந்தது. மற்றொரு மாடு உயிருடன் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே, நரசிம்மபுரம் பகுதியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 40 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. மதுரை மாவட்டம், அழகர்கோவில் மலையில் இருந்து நேற்று முன்தினம் இரவு வழி தவறி வந்த 2 காட்டு மாடுகள் கிணற்றில் தவறி விழுந்தன.

கிணற்றில் 20 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்ததால், இரவு முழுவதும் மாடுகள் நீந்தியபடி கத்திக் கொண்டே இருந்தன. இந்த நிலையில், நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள், இது குறித்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அழகர்கோவில் வனச்சரகர் குமார் மற்றும் நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) விவேகானந்தன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். கிணற்றில் ஒரு மாடு உயிருடன் இருந்தது.

ஜேசிபி எந்திரம் உதவியுடன் மாடுகளை கிணற்றிலிருந்து மேலே கொண்டுவரும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ஒரு மாட்டின் உடலையும், மற்றொரு மாட்டை பத்திரமாகவும் கயிறுகட்டி மேலே தூக்கி வந்தனர். பின்னர் அவற்றை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

உயிருடன் இருந்த மாட்டை வனத்துறையினர் காயங்கள் ஏதும் உள்ளதா சோதனை செய்து வனப்பகுதியில் விட்டனர். உயிரிழந்த மாட்டின் உடலை கால்நடை மருத்துவ உதவி இயக்குநர் சிங்கமுத்து தலைமையிலான மருத்துவக் குழுவினர் உடற் கூராய்வு வனப்பகுதியில் புதைத்தனர். இதனால் நேற்று காலையில் அந்தப் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

The post நத்தம் அருகே பரபரப்பு கிணற்றில் தவறி விழுந்த காட்டு மாடுகள்: ஒருமாடு உயிரிழப்பு; மற்றொரு மாடு மீட்பு appeared first on Dinakaran.

Tags : Natham ,Dindigul district ,Nattam ,Narasimhapuram ,Kannan ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...