×

புதுப்பேட்டையில் பயிற்சி பள்ளி இன்று திறப்பு சென்னை காவல் முதல் குதிரையேற்றப் போட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை: சென்னை புதுப்பேட்டையில் குதிரையேற்ற பயிற்சி பள்ளியை திறந்து வைத்து, முதலாவது சென்னை காவல் குதிரையேற்ற போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து, சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை குதிரைப்படை 1780ம் ஆண்டு, சென்னை மாகான ஆளுநர் வில்லியம் லாங்கன் ஆரம்பிக்கப்பட்டு, அவரது பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து, சென்னை காவல் குதிரைப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போது, சென்னை காவல் மோட்டார் வாகனப்பிரிவு, துணை ஆணையர் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் தலைமையில் சென்னை காவல் குதிரைப்படை எழும்பூரில் இயங்கி வருகிறது.

சென்னை காவல் குதிரைப்படையின் தலையாய பணி, தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து மேற்கொள்வது. மேலும், சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு பணி, குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின அணிவகுப்பு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணி, அரசு மற்றும் காவல்துறை இணைந்து நடத்தும் அரசு நிகழ்ச்சிகளில் அலங்கார அணி வகுப்பு, முக்கிய பிரமுகர்களின் அலங்கார அணி வகுப்பு மற்றும் இதர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது, சென்னை காவல் குதிரைப்படை 24 குதிரைகளை கொண்டு இயங்கி வருகிறது. இந்த குதிரைகள் போலீசார் கட்டுப்பாட்டில், போலீசார் ரோந்து பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. முதல்வர் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பின் தொடர்ச்சியாக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை காவல்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக “முதலாவது சென்னை காவல் குதிரையேற்ற போட்டியை இன்று முதல் வரும் 22ம் தேதி வரை 3 நாட்கள் சென்னை, புதுப்பேட்டையில் நடத்துகிறது.

இன்று மாலை 4 மணியளவில், புதுப்பேட்டை, குதிரைப்படை வளாகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குதிரையேற்ற பயிற்சி பள்ளியை திறந்து வைத்து, ‘முதலாவது சென்னை காவல் குதிரையேற்ற போட்டியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், முன்னிலை வகிக்கிறார். மேலும் உள்துறை செயலாளர் அமுதா 21ம் தேதி (நாளை), காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் 22ம் தேதி (நாளைமறுதினம்) போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்குகின்றனர். சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் முன்னிலை வகிக்கிறார். நிகழ்ச்சியில் காவல் உயரதிகாரிகள், சென்னை காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* 8 அணிகளில் 46 குதிரைகள்
மொத்தம் 13 குதிரையேற்றப் போட்டிகள் நடைபெற உள்ளன. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும், காவல் துறை அணிகள் மற்றும் பொதுமக்கள் அணிகள் என 46 குதிரைகளுடன் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டிகளில் ஒவ்வொரு பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் (தங்கப்பதக்கம்), இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம் (வெள்ளிப்பதக்கம்) மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் (வெண்கலப்பதக்கம்) ரொக்கமாக வழங்கப்பட உள்ளது.

The post புதுப்பேட்டையில் பயிற்சி பள்ளி இன்று திறப்பு சென்னை காவல் முதல் குதிரையேற்றப் போட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Puduppet ,Chennai Police ,Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Equestrian Training School ,Puduppet, Chennai ,Chennai Police Equestrian Competition ,Chennai Cavalry ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...