×

பணவீக்கம் தேசிய சராசரியை விட தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது ஒன்றிய அரசின் நிதி பகிர்வு குறைந்துள்ளது: நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் பேட்டி

சென்னை: பணவீக்கத்தை பொறுத்தவரை தேசிய சராசரியை விட தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. அதேநேரத்தில் ஒன்றிய அரசின் நிதிப்பகிர்வு 6.6 சதவீதத்தில் இருந்து 4.08 சதவீதமாக குறைந்துள்ளது. இதுதவிர செஸ் மற்றும் மேல் வரி ஆகியவற்றாலும் மாநிலத்துக்கு நிதி குறைவாகவே கிடைக்கிறது. என்று நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் கூறினார். தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் குறித்து நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் கூறியதாவது: பணவீக்கத்தை பொறுத்தவரை தேசிய சராசரியை விட தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக தமிழக அரசு செயல்பட்டுள்ளது. மூலதன செலவுகளை பொறுத்தவரை, 2024-25ம் ஆண்டில் 47 ஆயிரம் கோடி அளவில் கட்டமைப்புகளுக்காக செலவிட உள்ளோம். தமிழகத்தின் நிதி பற்றாக்குறை, 3.5 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்று நிதி பொறுப்புடமை சட்டம் கூறுகிறது. அந்த வரம்புக்குள் நாம் உள்ளோம்.

மொத்த பொருளாதாரத்தில், கடன் என்பது, படிப்படியாக சரிவை நோக்கி வைத்துள்ளோம். மிக நெருக்கடியான காலத்தில், வரி வருவாய் சிக்கல்களுக்கு உள்ளானது. இதற்கு காரணம், தமிழகம் சந்தித்த இரண்டு தொடர் இயற்கை பேரிடர்கள். . நீண்டகால சீரமைப்பு, வெள்ள நிவாரணத்துக்காக அதிக செலவு ஏற்பட்டது. முக்கியமாக, சொந்த வரி வருவாயில், வணிவகரித்துறையில் இருந்து 15 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கிறோம். பத்திரப்பதிவுத்துறையில் கடந்தாண்டு எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை. ஆனால், அடுத்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கிறோம். வணிகவரித் துறையில் நிறைய சீர்திருத்தம் செய்துள்ளோம்.

வரி ஏய்ப்பை தடுக்கவும், நிகழ்நேர தகவல் பரிமாற்றத்தின் மூலம் வரி வசூலை கண்காணிக்கவும், ஐதராபாத் ஐஐடியுடன் ஒப்பந்தம் செய்து தரவு பகுப்பாய்வு குழுவை அமைத்துள்ளோம். அதே போல், பத்திரப்பதிவுத்துறையிலும் நிறைய மாற்றங்கள் செய்துள்ளோம். இந்த முயற்சிகள் அடுத்த நிதியாண்டில் பலன் அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் வரிவருவாய் திரட்டப்பட்டு, குறிப்பிட்ட இலக்கை அடைய முடியும். மத்திய அரசின் நிதிப்பகிர்வு 6.6 சதவீதத்தில் இருந்து 4.08 சதவீதமாக குறைந்துள்ளது. இதுதவிர செஸ் மற்றும் மேல் வரி ஆகியவற்றாலும் மாநிலத்துக்கு நிதி குறைவாகவே கிடைக்கிறது. இதுகுறித்தும் மத்திய அரசிடம் நாம் வலியுறுத்தி வருகிறோம். இதுதவிர, மத்திய அரசிடம் இருந்து வரும் மானிய உதவிகள் குறைந்து கொண்டே வருகிறது.

மாநிலத்தின் வரி வருவாய் ரூ. 1.95 லட்சம் கோடி, வரியல்லா வருவாய் ரூ. 30,728 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கனிமள வளம் தொடர்பாக புதிய சீர்திருத்தம் மற்றும் வரியல்லா வருவாய் தொடர்பான திட்டங்களில் மாற்றம் கொண்டுவந்துள்ளோம். சேமிப்பு நிதியில் இருந்தும் கொண்டுவந்ததன் மூலம் இந்த நிலை எட்டப்படும். மத்தியவரி பகிர்வை பொறுத்தவரை, ஜிஎஸ்டி வரி வருவாய் நாடு முழுவதும் அதிகரித்துள்ளதால், நிதிக்குழு பரிந்துரை அடிப்படையில் அதிகரிக்கும் என்பதால் திருத்திய மதிப்பீடுகளில் அதிகமாக கொடுத்துள்ளோம். தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, வரி ஏய்ப்பை தடுத்து, வரி வருவாயை தொடர்ந்து வணிக வரி மற்றும் இதர துறைகளுடன் இணைந்து கண்காணித்து வருகிறோம். மோட்டார் வாகன வரி உயர்விலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களை விட, நான்கு சக்கர வாகனங்கள், சொகுசு வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் வரி வருவாய் திரட்டுவதற்கான நம்பிக்கை உள்ளது. வரி ஏய்ப்பை தடுப்பதிலும் முயற்சி எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post பணவீக்கம் தேசிய சராசரியை விட தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது ஒன்றிய அரசின் நிதி பகிர்வு குறைந்துள்ளது: நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union government ,Finance Secretary ,Udayachandran ,CHENNAI ,Dinakaran ,
× RELATED பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு...