×

மதுரை, சேலம் மாநகராட்சிகளில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகம்

சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் நோக்கத்தோடு ரூ.1,517 கோடியில் நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. 9 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட இந்நிலையம் நிறைவுறும் தருவாயில் உள்ளது; விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். மதுரை மற்றும் சேலம் மாநகராட்சிகளில் 2024-25ம் நிதியாண்டில் 24மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகம் விரிவுபடுத்தப்படும்.

* 5,000 ஏரிகள், குளங்கள் புனரமைக்க ரூ.500 கோடி

விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி’ என்ற சொற்றொடரை முழுவதுமாக உள்வாங்கி, கல்லணை முதல் சங்கிலித்தொடர் ஏரிகள், குளங்கள் என நீர் மேலாண்மையின் உச்சத்தை தமிழ்ச் சமூகம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே எட்டியிருந்தது. ஆனால், காலப்போக்கில் இந்த நீர்நிலைகள் ஆங்காங்கே பராமரிப்பு இன்றியும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியும் தன் நிலையை இழந்து வருகின்றன. இந்தச் சூழலில் ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய சிறுபாசன ஏரிகள். குளங்கள் மற்றும் வரத்துக் கால்வாய்களைச் சீரமைத்து மேம்படுத்தி, இயற்கையை மீட்டெடுக்கும் பெரும் முயற்சியாக இந்த ஆண்டில் சுமார் ரூ.500 கோடி மதிப்பீட்டில் தலைசிறந்த அறிவியல் நிறுவனங்களின் பங்களிப்போடு 5,000 நீர்நிலைகளைப் புனரமைக்கும் பெரும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

* திருநீர்மலை, திருப்பரங்குன்றத்தில் ரூ.26 கோடியில் ரோப்கார்

இந்த அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த 3 ஆண்டுகளில் 1,290 திருக்கோயில்களில் திருப்பணிகள் நிறைவுபெற்று குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் பழநி, திருவண்ணாமலை, திருவரங்கம், சமயபுரம் உள்ளிட்ட 11 திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 143 திருக்கோயில்களில் உள்ள திருக்குளங்களை சீரமைக்க ரூ.84 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்துசமய அறநிலையத்துறையின் பதிப்பகத்துறை மூலம் 200க்கும் மேற்பட்ட அரிய நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை மற்றும் மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள திருக்கோயில்களுக்கு கம்பிவட ஊர்தி (ரோப் கார்) வசதி ரூ.26 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். மேலும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்திட இந்த ஆண்டு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* வடசென்னை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.1000 கோடி

வடசென்னை வளர்ச்சித் திட்டம் ரூ. 1000 கோடியில் மேற்கொள்ளப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நிலை, அறிக்கையில், ‘சென்னை மாநகரில் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்ய ‘வடசென்னை வளர்ச்சித் திட்டம்’ எனும் புதிய முயற்சியை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், வாட்டர் பேசின் சாலையில் ரு.75 கோடியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் புதிய குடியிருப்புகள், எழும்பூரில் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ. 53 கோடியில் உயர்தர சிகிச்சை பிரிவு, ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் ரூ. 96 கோடியில் 2 புதிய கட்டடங்கள். பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் ரூ.55 கோடியில் 3 புதிய தளங்கள். ரூ.11 கோடியில் தொழிற்பயிற்சி நிலையம், ரூ.30 கோடியில் ரெட்டேரி, வில்லிவாக்கம், பாடி ஏரிகளை சீரமைத்தல், ரு. 45 கோடியில் பள்ளிகளைப் புதுப்பித்தல், மேம்படுத்துதல் மற்றும் கணினிமயமாக்கல் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் என மொத்தம் ரூ.1000 கோடியில் மேற்கொள்ளப்படும்.
வடசென்னைப் பகுதிகளில் கழிவுநீர் மற்றும் குடிநீர் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு கழிவுநீரை திறம்பட அகற்றுவதற்கும் ரூ.946 கோடியில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

* 1 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2500 கோடி கல்விக்கடன்

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்லூரிக் கனவை நனவாக்கிடவும், அவர்தம் பெற்றோரின் நிதிச்சுமையைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலும், தேவையின் அடிப்படையில் 2024-25ம் ஆண்டில் 1 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு 2,500 கோடி ரூபாய் அளவிற்கு, பல்வேறு வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கிடுவதை அரசு உறுதி செய்திடும்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னையில் ரூ.25 கோடியில் உயர்திறன் மையம்

புற உலக சிந்தனையற்ற மதி இறுக்கம் (ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர்) உடையோருக்கு தொடுதிறன் சிகிச்சை, செயல்முறை பயிற்சி, இயன்முறை பயிற்சி, பேச்சுபயிற்சி, சிறப்பு கல்வி, தொழிற்பயிற்சி ஆகிய ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகள் மட்டுமின்றி பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான ஆற்றுப்படுத்துல் சேவை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் ஆகிய அனைத்து சேவைகளையும் ஓரிடத்திலேயே பெற்றிடும் வகையில் புற உலக சிந்தனையற்ற மதி இறுக்கம் உடையோருக்கான உயர் திறன் மையம் ஒன்று சென்னையில் ரூ.25 கோடியில் அமைக்கப்படும்.

* 10,000 புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள்

தமிழ்நாட்டின் சுயஉதவிக் குழுத் திட்டம் நாடெங்கும் கோடிக்கணக்கான மகளிரின் வாழ்க்கையில் ஒளியேற்றும் இயக்கமாக உருவெடுத்துள்ளது. இதுவரை சுயஉதவிக் குழு இயக்கத்தில் இணைந்திடாத மகளிர் மற்றும் விளிம்புநிலை வாழ் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு 10,000 புதிய சுயஉதவிக் குழுக்கள் வரும் நிதியாண்டில் உருவாக்கப்படும். வரும் நிதியாண்டில் 35,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* பள்ளி கட்டமைப்புக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு ெபரும் பங்காற்றிய கல்வியாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டை முன்னிட்டு, பள்ளி கல்வி வளர்ச்சிக்கு என ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை 5 ஆண்டுகளில் செல்படுத்த இந்த அரசால் அறிவிக்கப்பட்டு ரூ.2,497 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிதியாண்டில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பள்ளி கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.

The post மதுரை, சேலம் மாநகராட்சிகளில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Salem Municipal Corporations ,Nemili ,Chennai ,Salem Corporations ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை