×

வறுமையை அகற்றிட முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்: 5 லட்சம் ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து

கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நாட்டிற்கே முன்னோடியாக விளங்கிடும் வகையில், தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பல சமூகநலத் திட்டங்களின் வாயிலாக வறுமையை குறைப்பதில் நமது மாநிலம் மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதை அங்கீகரிக்கும் வகையில் ஒன்றிய அரசின் நிதி ஆயோக் சமீபத்திய தனது அறிக்கையில் பன்முக வறுமைக் குறியீட்டின்படி, தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் சதவீதம் மிகக் குறைவாக 22 சதவீதம் மட்டுமே என அறிவித்துள்ளது. இருப்பினும், தற்போது மிகவும் வறியநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைக்கோடி ஏழைக் குடும்பங்களையும் கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றிட அரசு முடிவு செய்துள்ளது. அடுத்து வரும் 2 ஆண்டுகளில் மிகவும் வறியநிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது.

ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமன்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும். அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு, மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராமசபை ஆகியவற்றின் மூலம் மாநிலம் முழுவதும் மிகவும் ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்படும். ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ என்ற பெயரிலான இப்புதிய திட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பும் உறுதி செய்யப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ.27,922 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* வேலைக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு தனித்திறன் பயிற்சி

பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதை மேலும் அதிகரிக்க ஒரு சிறப்புத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். தமிழ்நாட்டைச் சார்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் போன்ற 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு. அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் ஊதிய மானியம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். பணிபுரியும் மகளிரின் மழலைக் குழந்தைகளின் நலன் காத்து உதவும் வகையில் அனைத்து சிப்காட் தொழிற்பேட்டைகளிலும் பொதுத்துறை தனியார் பங்களிப்புடன் குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கப்படும். மகப்பேறு, திருமணம் போன்ற காரணங்களால் பணியில் இடைநிற்க நேரிட்டு, மீண்டும் வேலைக்குச் செல்ல விரும்பும் பெண்களுக்குத் தேவையான தனித்திறன் பயிற்சி அளிப்பதற்கான புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.

* சென்னை, கோவை, மதுரையில் ரூ.26 கோடியில் 3 மகளிர் விடுதிகள்

நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ‘தோழி’ திட்டத்தின் மூலம் தாம்பரம், திருச்சி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட 10 இடங்களில் 1,145 மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.35 கோடியில் அனைத்து நவீன வசதிகளுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. சென்னை, திருவண்ணாமலை, ஓசூர் ஆகிய நகரங்களில் 432 பெண்கள் பயன்பெறும் வகையில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் 3 புதிய தோழி விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது.அதைத்தொடர்ந்து வரும் நிதியாண்டில் சென்னை, கோவை, மதுரை ஆகீய முக்கிய நகரங்களில் 345 மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.26 கோடியில் 3 புதிய தோழி விடுதிகள் கட்டப்படும்.

* 2000 ஏக்கர் நிலப்பரப்பளவில் ஒரு புதிய விண்வெளி தொழில்: தூத்துக்குடி மாவட்டத்தில்

மாநிலத்தில் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்கு சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்தது. 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதில், தென்மாவட்டங்கள் 112 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்துள்ளன. சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான விண்வெளித் தளத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோ நிறுவனம் தற்போது உருவாக்கி வருகிறது. அதனையொட்டிய பகுதிகளில் வான்வெளி சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் விதமாக 2000 ஏக்கர் நிலப்பரப்பளவில் ஒரு புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா டிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்படும். இந்தியாவில் உலகளாவிய திறன் மையங்கள் அமைப்பதற்குரிய தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு. மாநிலத்தில் அமைய உள்ள புதிய உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்களில், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட மாத ஊதியத்துடன் உருவாக்கப்படும் உயர்திறன் மிக்க வேலைகளுக்கு முதலாமாண்டு 30 சதவீதம், இரண்டாமாண்டு 20 சதவீதம் மற்றும் மூன்றாமாண்டு 10 சதவிதம் ஊதிய மானியம் வழங்கப்படும். மேலும் கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில் உலகளாவிய திறன் மையங்கள் அமைப்பதற்கான உகந்த சூழல் ஏற்படுத்தப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு 2,295 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post வறுமையை அகற்றிட முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்: 5 லட்சம் ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Government ,Niti Aayog ,Chief Minister ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...