×

வடசென்னை-மத்திய சென்னையை இணைக்கும் யானைகவுனி மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும்: தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் தயாநிதிமாறன் எம்பி நேரில் வலியுறுத்தல்

சென்னை: வடசென்னை-மத்திய சென்னையை இணைக்கும் யானைகவுனி மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டுமென தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் தயாநிதிமாறன் எம்பி நேரில் வலியுறுத்தியுள்ளார். தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தயாநிதி மாறன் எம்பி பேசியதாவது:

யானைகவுனி பாலமானது வடசென்னை மற்றும் மத்திய சென்னைப் பகுதிகளை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2019 முதல் தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் வலியுறுத்தியும் இந்தப் பாலத்தின் சீரமைப்புப் பணி மந்த நிலையிலேயே நடைபெற்று வருவதால் இப்பகுதி குடியிருப்புவாசிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கின்றனர். இதை விரைவில் முடிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவாகவும், அவருக்கு மரியாதை செலுத்திடும் வகையிலும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும். வில்லிவாக்கம் பழைய ரயில்வே சாலையை மறுசீரமைக்கும் நடைமுறைகளை விரைவுபடுத்த தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதியிருந்தேன். இந்த பணியை மேற்கொள்ள முன்வந்த சென்னை மாநகராட்சிக்கு தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பொது மேலாளரிடம் வழங்கியிருந்தேன். ஆனால் இன்றுவரை தடையில்லா சான்று வழங்கப்படாததால் அந்தச் சாலை சீரமைப்பு பணிகள் கிடப்பில் உள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் அனைத்து பறக்கும் ரயில், புறநகர் ரயில் நிலையங்களிலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு போதுமான அளவு பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்கள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக முதியவர்கள் அதிகமாக பயன்படுத்தும் மாம்பலம், சேத்துப்பட்டு, கடற்கரை, பார்க் டவுன் மற்றும் சூளைமேடு புறநகர் ரயில் நிலையங்களில் பேட்டரி வாகனங்கள், எஸ்குலேட்டர்கள் இன்றியமையாதவை. எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அடுக்கு மாடி வசதி பல்நோக்கு கார் பார்க்கிங் அமைக்க வேண்டும். சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் குறுகிய நேர காத்திருக்கும் அறை மற்றும் பொருட்கள் பாதுகாக்கும் அறைகள் மேம்படுத்தப்பட்டு, தேவையான ஏற்பாடுகளை செய்திட வேண்டும். டிஜிட்டல் அறிவிப்புப் பலகைகளை சுற்றுலாவை மேம்படுத்தவும், விழிப்புணர்வை அதிகரிப்பதற்காகவும் பொதுத் தகவல்களைக் காண்பிக்கவும் காட்சிப் படுத்தலாம். மூடப்பட்ட அண்ணாநகர் ரயில் நிலையத்தை மீண்டும் இயக்கக் கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.அது திறக்கப்பட்டால், இப்பகுதி மக்களின் சிரமம் குறையும். எனவே அண்ணாநகர் ரயில் நிலையத்தை மீண்டும் இயக்க வேண்டும்.

பறக்கும் ரயில் நிலையங்களில் பெண் பாதுகாப்புப் பணியாளர்களின் இருப்பை அதிகரிக்கவும், பெண்களுக்கான பெட்டிகளில் சிறந்த சுகாதார வசதிகளை வழங்குவதும் காலத்தின் தேவை. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன், ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறையாவது, அனைத்து ரயில் நிலையங்களிலும், புகார்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளுக்கு முறையான அமைப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்த, வழக்கமான ஆய்வுகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post வடசென்னை-மத்திய சென்னையை இணைக்கும் யானைகவுனி மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும்: தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் தயாநிதிமாறன் எம்பி நேரில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Yanagivani ,North Chennai-Central Chennai ,Dayanithimaran ,Southern Railway ,CHENNAI ,Parliament ,Chennai Railway Division ,Southern Railway Chennai Southern Railway ,Yianikauni ,Dinakaran ,
× RELATED புரசைவாக்கத்தில் திறந்தவெளி...