×

சட்ட விரோதமாக நரிக்குறவர், இருளர்களுக்கான சுடுகாடு, இடுகாடு ஆக்கிரமிப்பு: மாவட்ட கலெக்டரிடம் புகார்

திருவள்ளூர்: ஒரக்காடு கிராமத்தில் நரிக்குறவர் மற்றும் இருளர்களுக்கான சுடுகாடு, இடுகாடு சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து அந்த இன மக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரக்காடு கிராமத்தில் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரக்காடு கிராமத்தில் தனியாக சுடுகாடு மற்றும் இடுகாட்டிற்கு தமிழக அரசால் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இவர்களில் யாரேனும் இறந்தால் நல்லடக்கமும், தகனமும் செய்ய கடந்த 60 ஆண்டுகளாக இந்த சுடுகாட்டை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த இடுகாடு மற்றும் சுடுகாடுக்கு அருகில் நிலம் வாங்கியிருப்பவர்கள் சட்ட விரோதமாக கடந்த 12.2.24 அன்று பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கி தங்கள் நிலத்துடன் சேர்த்து வேலி அமைத்து வருகின்றனர்.

உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன் தலைமையில் நரிக்குறவர்கள் மற்றும் இருளர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். இதனை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

The post சட்ட விரோதமாக நரிக்குறவர், இருளர்களுக்கான சுடுகாடு, இடுகாடு ஆக்கிரமிப்பு: மாவட்ட கலெக்டரிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Orakadu ,District Collector ,Cholavaram Union ,Tiruvallur District ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...