×

துரைப்பாக்கம் – பல்லாவரம் 200 அடி சாலையில் தூசி படலத்தால் பொதுமக்கள் அவதி: லாரிகள் மூலம் தண்ணீர் தெளிக்க கோரிக்கை

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் – பல்லாவரம் 200 அடி சாலையில் தூசி படலத்தால் அவதிப்படும் பொதுமக்கள், லாரிகள் மூலம் சாலையில் தண்ணீர் தெளிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை துரைப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் செல்லும் 200 அடி ரேடியல் சாலை துரைப்பாக்கம் சிக்னலில் இருந்து தொடங்குகிறது. இந்த சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான பணிகள் முடிவுற்ற நிலையில், கால்வாய் அமைக்கும் பணி மட்டும் முடிவடையாமல் உள்ளது.

இதுமட்டுமல்லாமல் மழைநீர் கால்வாய் பணி முடிந்த இடத்தில் சரளை கற்களை கொட்டி நிரப்பியுள்ளனர். பணி முடிவற்ற இடத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெறாமல் உள்ளதால் அவ்வழியே கனரக வாகனங்கள் அதிகமாக செல்வதால் தூசி படலம் பறந்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து தூசி பறக்காதவாறு லாரிகள் மூலம் தண்ணீர் தெளித்து வந்தனர். ஆனால், சில நாட்களாக லாரிகள் வந்து தண்ணீர் தெளிக்கப்படாததால் மீண்டும் சாலை முழுவதும் தூசி படலமாக மாறியுள்ளது.

இதனால், பைக்கில் பயணம் செய்வோர் மட்டுமின்றி பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். தூசி படலம் பறந்த வண்ணம் இருப்பதால் சாலையில் பயணிப்போரும், அப்பகுதியில் வசிப்போருக்கும் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வாகனத்தில் அதிக புகை வந்தால் மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை மேற்கொள்கிறது.

ஆனால் துரைப்பாக்கம் – பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் புகையை விட மோசமாக ஏற்படும் தூசி படலத்தை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து பணி முடியும் வரை தூசி படலம் பறக்காதவாறு லாரிகள் மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post துரைப்பாக்கம் – பல்லாவரம் 200 அடி சாலையில் தூசி படலத்தால் பொதுமக்கள் அவதி: லாரிகள் மூலம் தண்ணீர் தெளிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Durai Pakkam- ,Pallavaram ,Durai Pakkam ,Durai Pakkam - ,Chennai Durai Pakkam ,
× RELATED கணவர் மாயம், கடன் தொல்லையால் விரக்தி...