×

ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 835 பேர் கைது

சோழிங்கநல்லூர்: நியாய விலை கடைகள் மூலம் விநியோகம் செய்யும் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 835 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் கோபால் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு பொது விநியோக திட்டத்தின் மூலம் அத்தியாவசிய பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.

அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர், உடந்தையாக செயல்படுவோர் மீது வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, கடந்த 1.1.2024 முதல் 31.1.2024 வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.34,12,874 மதிப்புள்ள 3310.17 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 249 எரிவாயு உருளைகள், 270 லிட்டர் மண்ணெண்ணெய், 535 கிலோ கோதுமை, 1070 கிலோ துவரம்பருப்பு, 30 கிலோ சர்க்கரை, 10 பாக்கெட் பாமாயில் ஆகியவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 121 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குற்றச்செயலில் ஈடுபட்ட 835 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டத்தின் கீழ் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொதுமக்கள் 180059 95950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 835 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Choshinganallur ,Secretary of ,Food Supply ,and Consumer ,Protection Department ,Gopal ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக...