×

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் தாசில்தார் அலுவலகத்திற்கு வண்டலூர் என பெயர் வைப்பு: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

கூடுவாஞ்சேரி: நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் கட்டப்பட்டுள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு வண்டலூர் என பெயர் வைத்ததால் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நகராட்சியில் உள்ள பழமை வாய்ந்த அரசு பயணியர் விடுதியை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நகர மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

அதேபோல், ரூ.3 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் வண்டலூர் தாசில்தார் அலுவலக கட்டிடமும், கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலை ஓரத்தில் உள்ள நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் ரூ.1 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் மைய கட்டிடமும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், வண்டலூர் தாசில்தார் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. ஆனால், ஏற்கனவே இருந்த மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் எச்சரித்தும் நகராட்சி கட்டிடமும், அறிவு சார் மைய கட்டிடமும் மந்தகதியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் கட்டப்பட்டுள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு வண்டலூர் என பெயர் வைத்ததால் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டமும், இதேபோல் செங்கல்பட்டு தாலுகாவை இரண்டாக பிரித்து வண்டலூர் புதிய தாலுகா அலுவலகமும் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

இதில், வண்டலூரில் தாசில்தார் அலுவலகம் கட்டப்பட்டிருந்தால் வண்டலூர் தாசில்தார் அலுவலகம் என பெயர் வைத்திருக்கலாம். ஆனால், நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் வண்டலூர் தாசில்தார் அலுவலகத்தை கட்டி விட்டு வண்டலூர் தாசில்தார் அலுவலகம் வைத்திருப்பதால் நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியா அல்லது வண்டலூர் நகராட்சியா என பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி
உள்ளது.

எனவே வண்டலூர் தாசில்தார் அலுவலகம் என பெயர் எழுதியிருக்கும் இடத்தின் அருகில் வண்டலூர் இருப்பு அலுவலகம் என எழுத வேண்டும். அப்படி எழுதினால் குழப்பம் ஏற்படாது. எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மந்தகதியில் நடைபெற்று வரும் நகராட்சி அலுவலக கட்டிடத்தையும் அறிவு சார் மைய கட்டிடத்தையும் விரைந்து முடிக்க வேண்டும்’ என்றனர்.

The post நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் தாசில்தார் அலுவலகத்திற்கு வண்டலூர் என பெயர் வைப்பு: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : tahsildar ,Vandalur ,Nandivaram-Kooduvanchery ,Guduvanchery ,Nandivaram ,Nandivaram – Kuduvancheri Municipality ,Chengalpattu District ,Nandivaram-Kooduvanchery Municipality ,Tahsildar Office ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம்,...